பிளஸ்-2 புதிய பாடத்திட்டம் டிசம்பர் மாதத்திற்குள் தயார் இயக்குனர் தகவல்

அடுத்த கல்வி ஆண்டில் பிளஸ்-2 வகுப்புகளுக்கு அமல்படுத்தப்பட இருக்கும் புதிய பாடத்திட்டம் டிசம்பர் மாதத்திற்குள் தயாராகி விடும் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் தெரிவித்தார்.

Update: 2018-08-31 23:00 GMT
சென்னை, 

1-வது வகுப்பு, 6-வது வகுப்பு, 9-வது வகுப்பு, பிளஸ்-1 வகுப்பு ஆகியவற்றுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு அந்த பாடத்திட்டம் இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதேபோல் 2, 7, 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு ஆகியவற்றுக்கு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய பாடத்திட்டம் அடுத்த கல்வியாண்டில் (2019-2020) நடைமுறைக்கு வரும்.

இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள கலைத்திட்ட வடிவமைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது. குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் ஆர்.ராமானுஜம், ஈ.சுந்தரமூர்த்தி, கு.ராமசாமி, ஆர்.பாலசுப்பிரமணியன் மற்றும் கலா விஜயக்குமார், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் க.அறிவொளி ஆகியோர் கலந்துகொண்டனர்.

2, 7, 10, பிளஸ்-2 பாடநூல்கள் தயாரிக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதற்காக அரசு வழங்கியுள்ள திட்டத்தின்படி பணிகள் துரிதமாக நடைபெற்று வருவது குறித்தும், பாடநூல்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு மாணவர்களிடம் சென்று சேர்ந்திருப்பது பற்றியும் கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஆசிரியர்களுக்கு பயிற்சி

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க.அறிவொளி பாடநூல் தயாரித்தல் பணிகளின் முன்னேற்றம் குறித்த விவரங்களை விளக்கினார். முதற்கட்டமாக வெளியிடப்பட்ட பாடநூல்களை மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்றுவிப்பது சார்ந்து அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளின் 2 லட்சத்து 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இதுவரை பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், 80 ஆயிரம் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முதன்முறையாக பிளஸ்-1 பாடநூல் பயிற்றுவித்தலில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

பாடநூல்களைத் தாண்டியும் மாணவர்களின் அறிவுத்திறம் வளரும் நோக்கில் பாடப்பகுதிகள் காணொலி வகுப்புகளாகவும், இணைய வளங்களாகவும் தயாரிக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.

டிசம்பர் மாதம் தயார்

திட்டமிட்டபடி, அனைத்து வகுப்புகளுக்கும் பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு மாணவர்களிடம் சென்றடையும் வகையில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன என்பதையும் இயக்குனர் விளக்கினார்.

வருகிற கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும் பாடத்திட்டம் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் தயார் ஆகி விடும்.

இந்த தகவலை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க.அறிவொளி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்