மாநில செய்திகள்
உயர்கல்வி நிறுவனங்களில் ராக்கிங் கொடுமையை ஒழிக்க ஆலோசனை கவர்னர் தலைமையில் நடந்தது

உயர்கல்வி நிறுவனங்களில் ராக்கிங் கொடுமையை முற்றிலும் ஒழிப்பதற்கான ஆலோசனை கூட்டம், கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெற்றது.
சென்னை,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று மாலை ராக்கிங் தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ஆர்.ராஜகோபால், உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி, உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் மங்கத்ராம் சர்மா, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

ராக்கிங் என்ற பெயரில் கல்லூரி மாணவர்களுக்கு நேரிடும் பாலியல் சீண்டல்களை விசாரிக்க கல்லூரி முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் குழு அமைக்கப்படாத கல்லூரிகளில் உடனடியாக குழு அமைக்க கவர்னர் அறிவுறுத்தினார். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ராக்கிங் தடுப்பு குழுக்களை கட்டாயம் அமைக்க வேண்டும்.

அனைத்து கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். ராக்கிங் மூலம் தவறு செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் நன்னடத்தை சான்றிதழ்களில் இதுபோன்ற சம்பவங்கள் பதிவு செய்யப்படும்.

உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள கல்லூரிகளில் சிறப்பு பேராசிரியர் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. காலிப்பணி இடங்களுக்கு விரைவில் தேர்வு நடத்தி அவற்றை நிரப்புவோம். பட்டியல் இனம் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை. இதுபற்றிய டாக்டர் ராமதாசின் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.