எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழக அரசு நடவடிக்கை

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எதிரொலியாக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

Update: 2018-09-13 22:00 GMT
சென்னை, 

ஊழல் வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் 6 ஆண்டுகள் பொதுத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் வழிவகை செய்கிறது. ஆனால், சட்டத்தை உருவாக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்றால் அவர்கள் ஆயுள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகியும், வக்கீலுமான அஸ்வினி உபாத்யாயா, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தி அதுகுறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி ஒவ்வொரு மாநில அரசுக்கும், அந்த மாநில ஐகோர்ட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டு கடிதம் அனுப்பியது. இதையடுத்து தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களில் சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்பட்ட தகவலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டுகளை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை தமிழக அரசின் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரையில் 178 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர். நாட்டிலேயே உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 324 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், சொத்துக்களை அபகரித்ததாகவும் தொடரப்பட்ட வழக்கு களை பல எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இதுதவிர தேர்தல் வழக்குகள் தனியாக உள்ளன என்று தன்னார்வ நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

சிறப்பு கோர்ட்டு அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.14.89 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் சிறப்பு கோர்ட்டை உருவாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சிறப்பு நீதிமன்ற கட்டிடத்தையும், புதிய நீதிபதிகள் நியமிப்பது குறித்தும் சென்னை ஐகோர்ட்டு தான் முடிவு எடுக்கும்.

இந்த சிறப்பு கோர்ட்டு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு ஏற்கனவே, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்பட அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை விசாரிக்க 1996-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிறப்பு கோர்ட்டு உள்ளது.

அந்த கோர்ட்டில் ஓரிரு ஊழல் வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த கோர்ட்டு அறையில் ஊழியர்கள் உள்பட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதால், அதையே சிறப்பு கோர்ட்டாக மாற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்