மகாத்மா காந்தி வேலை உறுதித்திட்ட செயலாக்கம்: தமிழக அரசு விருதுகளை பெற்றதற்கு முதல்-அமைச்சர் வாழ்த்து

மகாத்மா காந்தி வேலை உறுதித்திட்ட செயலாக்கம்: தமிழக அரசு விருதுகளை பெற்றதற்கு முதல்-அமைச்சர் வாழ்த்து

Update: 2018-09-14 19:22 GMT
சென்னை, 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தமிழக அரசுக்கு, மத்திய அரசால் வழங்கப்பட்ட விருதுகளை முதல்-அமைச்சரிடம் காண்பித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து பெற்றார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

டெல்லியில் கடந்த 11-ந் தேதி தேசிய அளவிலான விருது வழங்கும் விழா மத்திய அரசால் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 2017-18-ம் நிதியாண்டில் குறித்த காலத்திற்குள் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குதல் மற்றும் தாமதமாக வழங்கப்பட்ட ஊதியத்திற்கு இழப்பீடு வழங்குவதில் சிறந்த செயல்பாடு;

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உருவாக்கப்படும் சொத்துக்களுக்கு புவிக்குறியிடுதலில் சிறந்த முயற்சிகள்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து ஊதியம் செலுத்துதலில் சிறந்த செயல்பாடு ஆகியவற்றுக்காக தேசிய அளவிலான 3 மாநில விருதுகள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டன.

மேலும், இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக திருவண்ணாமலை, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு தேசிய அளவிலான 2 மாவட்ட விருதுகளும்; கிராம ஸ்வராஜ் அபியான் இயக்கத்தின்கீழ் குறிப்பிட்ட 7 முக்கியத் திட்டங்களை தன்னிறைவுடன் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேசிய அளவிலான மாவட்ட விருதும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை, பஞ்சாயத்து ராஜ் மற்றும் கனிம வளத்துறை மந்திரி நரேந்திரசிங் தோமரால் வழங்கப்பட்டது.

அந்த விருதுகளை தமிழ்நாடு அரசின் சார்பில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக்கொண்டார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாட்டிற்கு தேசிய அளவில் 3 மாநில விருதுகள் ஒரே ஆண்டில் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த விருதுகளை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்