தாமிரபரணி புஷ்கரம் விழாவை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது ராம கோபாலன் அறிக்கை

தாமிரபரணி புஷ்கரம் விழாவை தடுக்கவும், சீர்குலைக்கவும் முயற்சி நடக்கிறது என்றும், அரசு கண்காணிப்போடு இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராம கோபாலன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-20 20:30 GMT
சென்னை,

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தாமிரபரணி புஷ்கரம் நிகழ்ச்சி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆன்மிகத் திருவிழாவாகும். ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்ற விழாக்கள் நடைபெறுகிறது. அப்படிப்பட்ட விழாவிற்கு ஓர் ஆண்டுக்கு முன்னரே திட்டமிட்டு, மாநிலத்தின் பெருமையை உலகறிய செய்யும் வாய்ப்பாக பயன்படுத்துகிறார்கள்.

தாமிரபரணியில் நடைபெறும் புஷ்கரம் விழாவிற்கு தமிழக அரசு விரிவான ஏற்பாடுகளை செய்து, நன்கு விளம்பரப்படுத்தி உலக முழுவதும் தாமிரபரணியின் பெருமை, திருநெல்வேலியின் சிறப்பை கொண்டு சேர்க்க பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். இந்த நல்ல வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும் கூட தடுக்கவும், சீர்குலைக்கவும் நடக்கும் நடவடிக்கைகள் பார்த்தால், இவை தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்குச் செல்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.

தற்போது, இரண்டு படித்துறை தவிர மற்றவற்றில் நீராடலாம் என கலெக்டர் கூறியதாக ஒரு செய்தி கூறுகிறது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, புஷ்கரம் விழாவிற்கு சாமி எழுந்தருளுவது ஆகம விதிகளுக்கு எதிரானது என்றும் தீர்த்தவாரிக்கு சாமி எழுந்தருளக்கூடாது என்றும், படித்துறைகளில் இந்து அமைப்புகளை அனுமதிக்க கூடாது என்றும் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வந்துள்ளது.

உலகமே வியந்து போற்றும் புஷ்கரம் நடக்கும் இந்நேரத்தில் இதுபோன்ற குழப்பங்களை ஏற்படுத்தி, பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் போக்கை தமிழக அரசு கடுமையான நடவடிக்கை மூலம் தடுத்து நிறுத்த வேண்டும்.

கடந்த ஓர் ஆண்டாக தாமிரபரணி புஷ்கரத்திற்கு ஆன்மிக குழு அமைத்து பணிகள் திட்டமிட்டு நடைபெற்று வரும் வேளையில் இதுபோன்ற குழப்பத்தால் நிர்வாக மெத்தனம் ஏற்பட்டுவிடக்கூடாது. பல லட்சம் பேர் கூடும் இத்திருவிழாவில் அரசு மிகுந்த கண்காணிப்போடு இருந்து செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்