மீன்பிடி படகுகளில் நவீன கருவி : விளக்கம் அளிக்க ‘இஸ்ரோ’ அதிகாரிகள் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

மீன்பிடி படகுகளில் பொருத்தப்பட்டுள்ள ‘டிரான்ஸ்பாண்டர்’ என்ற நவீன கருவியின் செயல்பாடு குறித்து விளக்கம் அளிக்க ‘இஸ்ரோ’ அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2018-09-29 22:21 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் மீனவர் பாதுகாப்பு சங்கத் தலைவர் பீட்டர் ராயன் தொடர்ந்த வழக்கில், ‘தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்பான வழக்குகளை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

படகுகளில் கருவி

அப்போது, மத்திய மீன்வள உதவிஇயக்குநர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘சென்னை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் எல்லை தாண்டிச்செல்லும் தமிழக மீனவர்களை ‘இஸ்ரோ’ உதவியுடன் கண்டறிந்து எச்சரிக்க 241 ‘டிரான்ஸ்பாண்டர்கள்’ என்ற நவீன கருவிகள் மீன்பிடி படகுகளில் சோதனை அடிப்படையில் பொருத்தப்பட்டு உள்ளன.

இஸ்ரோவின் ‘ஜிசாட்-6’ செயற்கைகோள் உதவியுடன் இந்த ‘டிரான்ஸ்பாண்டர்கள்’ இயங்கும். அதிக மீன் கிடைக்கும் இடங்கள், பருவ நிலை ஆகியவற்றையும் இந்த நவீன கருவிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த கருவிகளின் செயல்பாடுகளை பொறுத்து, மேலும் 245 விசைப்படகு உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் விலையுள்ள இந்த ‘டிரான்ஸ்பாண்டர்கள்’ மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று கூறப்பட்டிருந்தது.

விளக்கம் அளிக்க வேண்டும்

அதேபோல, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘உலக வங்கியின் கடலோர பேரழிவு தடுப்பு திட்டத்தின்கீழ் தமிழக மீனவர்களுக்கு ரூ.62.14 கோடி செலவில் தகவல் மற்றும் எச்சரிக்கைக்காக ‘வயர்லெஸ்’ சாதனங்கள் 15 ஆயிரத்து 4 விசைப்படகுகளுக்கும், 2 ஆயிரத்து 481 சாதாரண படகுகளிலும் விரைவில் பொருத்தப்பட உள்ளது’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 5-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், ‘டிரான்ஸ்பாண்டர்’ என்ற நவீன கருவியின் செயல்பாடு குறித்து ‘இஸ்ரோ’ அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அதற்கு உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்