ரூ.9 கோடி முறைகேடு: சென்னையில் அரசு அதிகாரி கைது

ரூ.9 கோடி முறைகேடு செய்ததாக சென்னையில் அரசு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2018-10-01 03:12 IST

சென்னை,

ரூ.9 கோடி முறைகேடு செய்ததாக சென்னையில் அரசு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ரூ.9 கோடி முறைகேடு

சென்னை நந்தனத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் என்ற அரசு நிறுவனம் செயல்படுகிறது. அந்த நிறுவனத்தின் துணை பொது மேலாளர் சுப்பிரமணியன் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:–

தொழில் முதலீட்டு கழகத்தின் வருடாந்திர வரவு–செலவு கணக்கை தணிக்கை செய்து பார்த்தபோது, போலி ரசீதுகள் மூலம் ரூ.9 கோடி அளவுக்கு அரசு பணம் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.

தனது அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கைது

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. துணை கமி‌ஷனர் மல்லிகா, உதவி கமி‌ஷனர் ஜெயசிங் ஆகியோர் மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் டில்லிபாபு வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

விசாரணையில் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி முருகன் (வயது 53) என்பவர் இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டது தெரிய வந்தது. முருகன் கைது செய்யப்பட்டார். சென்னை ராஜகீழ்ப்பாக்கத்தை சேர்ந்த அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் வாஞ்சிநாதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்