தமிழ் வளர்ச்சிக்காக புதிய இயக்கம் தொடக்கம் சென்னையில் 15-ந்தேதி விழா

தமிழ் வளர்ச்சிக்காக ‘தமிழியக்கம்’ என்ற புதிய அமைப்பின் தொடக்க விழா சென்னையில் 15-ந்தேதி நடக்கிறது.

Update: 2018-10-10 23:00 GMT
சென்னை,

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் ‘தமிழியக்கம்’ என்ற பெயரில் உலக தமிழ் அமைப்பை உருவாக்கி இருக்கிறார். இந்த அமைப்பின் தொடக்க விழா சென்னையில் வருகிற 15-ந்தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் ஜி.விசுவநாதன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகின் பழமையும், தொன்மையும் நிறைந்த தமிழ் மொழியை தமிழர்கள் மறந்து விடுவார்களோ? என்ற சூழ்நிலை காணப்படுகிறது. எனவே தமிழை போற்றி பாதுகாப்பதற்காக ‘தமிழியக்கம்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலைமன்றத்தில் வருகிற 15-ந்தேதி(திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 6 அமர்வுகளாக நடைபெற உள்ளது.

ஓ.பன்னீர்செல்வம், பொன்.ராதாகிருஷ்ணன்

காலை 10 மணிக்கு நடைபெறும் அமர்வில் மொரீசியஸ் நாட்டு குடியரசு தலைவர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, கயானா நாட்டு தலைமை அமைச்சர் மோசஸ் வீராசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள்.

முதன்மை விருந்தினராக தமிழக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார்.

மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், இலங்கை கல்வி மந்திரி வே.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. இல கணேசன், பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர்.

‘தீந்தமிழ் திறவுகோல்’ எனும் நூல் வெளியிடப்பட உள்ளது. இதனை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட, சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் பெற்றுக் கொள்கிறார். ‘தமிழியக்கம்’ வலைத்தளத்தை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தொடங்கி வைக்கிறார்.

தமிழ் அறிஞர்கள் கவுரவிப்பு

தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமையில் மதியம் 12 மணிக்கு பாராட்டு அரங்கம் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த தமிழ் அறிஞர்கள், மூத்த தமிழ் சான்றோர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.

மதியம் 2 மணிக்கு அயல்நாட்டு தமிழ் சங்கத் தலைவர்கள் பங்கேற்கும் அமர்வு நடைபெறுகிறது. மதியம் 3 மணிக்கு பத்திரிகை மற்றும் தொலைகாட்சியை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பங்கேற்கும் அமர்வு நடக்கிறது.

மாலை 4 மணிக்கு ‘தமிழ்நாடு பெயர் மாற்ற பொன்விழா’ கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

மு.க.ஸ்டாலின்

மாலை 5.30 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் வாழ்த்து அரங்கம் நடக்கிறது. தமிழகத்தில் முதல் முறையாக 22 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரை ஆற்றுகிறார். ‘தமிழியக்கம்’ தொடக்க விழாவில், விமான நிலையங்களில் தமிழ் மொழியிலும் அறிவிப்பு வெளியிட வேண்டும் உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த அமைப்பின் நோக்கம் உலகத்தில் இருக்கும், தமிழ், தமிழர் அமைப்புகளை ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வருதல் ஆகும்.

எனவே வேறுபாடுகளை மறந்து தமிழுக்காக அனைவரும் ஒன்றிணைவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தமிழியக்கத்தின் பொதுச்செயலாளர் அப்துல்காதர், மாநில செயலாளர் மு.சுகுமார், பொருளாளர் வே.பதுமனார், மேலாண்மை குழு உறுப்பினர் டாக்டர் மணிமேகலை கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்