மத சடங்குகளில் தலையிடும்போது நீதிமன்றங்கள் சுய கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

மதச்சார்பற்ற வகையில் செயல்படும் நீதிமன்றங்கள் மத சடங்குகளில் தலையிடும்போது சுய கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் என்று ஸ்ரீரங்கம் பீடாதிபதி நியமன வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2018-10-20 22:15 GMT
சென்னை

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 11-வது பீடாதிபதியாக இருந்த ரங்கராமானுஜ தேசிகர், கடந்த மார்ச் 19-ந் தேதி மரணம் அடைந்தார். பின்னர், 12-வது பீடாதிபதியாக ஸ்ரீயமுனாச்சாரியார் தேர்வு செய்யப்பட்டார்.

அவரது ஸ்வீகரம் மற்றும் பட்டாபிஷேகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க உள்ளது. இந்தநிலையில், அவரது நியமனத்தை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த ஆசிரம சீடர் வெங்கட வரதன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘தனக்குப் பிறகு மடாதிபதியாக நியமிக்க மூன்று பேரின் பெயரை பரிந்துரைத்து 11-வது மடாதிபதியாக இருந்த ரங்கராமானுஜ தேசிகர் உயில் எழுதி வைத்திருந்தார். அதில், ஒருவர் ஏற்கனவே இறந்துவிட்டார். உயில்படி மற்ற இருவரில் ஒருவரை பீடாதிபதியாக நியமிக்காமல் 3-வது நபரை அவசர அவசரமாக நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். உயிலில் கூறப்பட்டபடி நியமனம் நடைபெறவில்லை. மரபு மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனவே, ஸ்ரீயமுனாச்சாரியார் பீடாதிபதியாக பொறுப்பேற்க தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு விடுமுறை நாளான நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகள் பார்த்திபன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர்.

அப்போது நீதிபதிகள், இந்த மடம் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கானது என்பதால் எப்படி பொதுநல வழக்கு தொடர முடியும்? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல், ‘ஆசிரமம் பொது அமைப்பு என்பதால் பொது நல வழக்கு தாக்கல் செய்யலாம்’ என்றார்.

விசாரணைக்கு பின்னர், புதிய மடாதிபதி பொறுப்பேற்க தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். அதேவேளையில், இந்த மனுவுக்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம், இந்து அறநிலையத்துறை 2 வாரத்துக்குள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதச்சார்பற்ற வகையில் செயல்பட்டு வரும் நீதிமன்றங்கள் மத சடங்குகளில் தலையிடும்போது சுய கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் என்று விசாரணையின் போது நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்