1-ந் தேதி முதல் தமிழகம் -புதுச்சேரியில் வடகிழக்குப் பருவ மழை தொடங்க சாதகமான சூழ்நிலை-சென்னை வானிலை மையம்

நவம்பர் 1-ந் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Update: 2018-10-29 08:31 GMT
சென்னை  

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தித்லி மற்றும் லூபன் புயல்கள் காரணமாக தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நவம்பர் 1-ந் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு  உள்ளது. 

தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஓரளவு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று அதாவது 29ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெய்துள்ள சராசரி மழையின் அளவு 16 செ.மீ. இந்த காலக்கட்டத்தில் பெய்யும் மழையின் இயல்பு அளவு 17 செ.மீ. பெய்திருக்கும் மழை 9 சதவீதம் குறைவு.

சென்னையில் சராசரியாக 12 செ.மீ. மழை பெய்துள்ளது. இயல்பு அளவு 14  செ.மீ. ஆகும் என்று தெரிவித்துள்ளார்

மேலும் செய்திகள்