பஸ் மீது கார் மோதல்: அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர் 2 மகன்களுடன் பலி

அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர் 2 மகன்களுடன் பலியானார்.

Update: 2018-11-07 22:30 GMT
வேப்பூர்,

அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர் 2 மகன்களுடன் பலியானார். தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது.

கரூர் மாவட்டம் தாந் தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 60). இவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் உதவியாளராக இருந்து வந்தார். சென்னை செங்குன்றத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக லோகநாதன் தனது மகன்கள் நிர்மல்குமார் (26), சிவராமன் (29), மருமகள் ஷாலினி (28), பேரன் லக்‌ஷன் (3) ஆகியோருடன் தாந்தோன்றிமலைக்கு வந்தார். பின்னர் அங்கு தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு அனைவரும் நேற்று காலை ஒரு காரில் சென்னை நோக்கி புறப்பட்டனர். காரை லோகநாதன் ஓட்டினார்.

காலை 7 மணி அளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கூத்தக்குடி ரெயில்வே மேம்பாலம் அருகில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் திட்டக்குடியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று, திடீரென சாலையின் இடது புறமாக திரும்பியது.

இதனால் லோகநாதன் ஓட்டி வந்த கார் பஸ்சின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் லோகநாதன், சிவராமன், நிர்மல்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஷாலினி பலத்த காயம் அடைந்தார். லக்‌ஷன் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

பலத்த காயம் அடைந்த ஷாலினியை பொதுமக்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பலியானவர்களின் உடல் களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான சிவராமன், நிர்மல்குமார் ஆகியோர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்