சந்திரபாபு நாயுடு-மு.க.ஸ்டாலின் சந்திப்பால் மாற்றம் ஏற்படாது தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

சந்திரபாபு நாயுடு- மு.க.ஸ்டாலின் சந்திப்பால் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2018-11-10 21:53 GMT
ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரியில் தமிழக பா.ஜனதா கட்சி சார்பில், ‘பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் நாடு அடைந்த நன்மைகள்’ என்ற தலைப்பில் விளக்க கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கை தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் பேசிய தாவது:-

இந்தியாவில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட புரட்சிகர செயல், பணமதிப்பு இழப்பு ஆகும். தூய்மை இந்தியாவை படைக்க பொருளாதார புரட்சியை மோடி செய்தார். இதன் மூலம் கருப்பு பணம், வரை முறையில்லாத பணம், கணக்கு காட்டாத பணம் வெளியில் வந்து உள்ளது.

பணமதிப்பு இழப்பை எதிர்க்கட்சிகள், போலி நிறுவனங்கள், கள்ளப்பணத்தை தீய சக்திகளுக்கு பயன்படுத்து பவர்கள்தான் தவறாக சித்தரிக்கின்றனர். நாட்டில் கணக்கு காட்டவேண்டும். வரி கட்ட வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு வந்து உள்ளது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாக 3 கோடி பேர்தான் வரி கட்டி வந்தனர். ஆனால் இந்த நான்கரை ஆண்டுகளில் கூடுதலாக 3 கோடி பேர் வரி செலுத்துகின்றனர்.

மக்களுக்கு ஒரு ரூபாய் செலவு செய்தால் அதில் 15 பைசாதான் போய்ச்சேருகிறது என்று ராஜீவ்காந்தி கூறினார். ஆனால் இந்த காலகட்டத்தில் மக்களின் பணம் மக்களுக்கே என்ற நிலை உருவாகி உள்ளது. சந்திரபாபு நாயுடு தன் மக்களையும், தொண்டர்களையும் ஏமாற்றி ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். எத்தனை ஆயிரம் ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு இணைந்தாலும் மோடியை தோற்கடிக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் அடைந்த நன்மைகள் குறித்து பொருளாதார நிபுணர்கள் சேகர், வெங்கட்ராமன், பா.ஜனதாவை சேர்ந்த நாராயணன் ஆகியோர் பேசினார்கள்.

பின்னர், தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறிய தாவது:-

சந்திரபாபு நாயுடு-ஸ்டாலின் சந்திப்பினால் மிகப் பெரிய கூட்டணி உருவானது போல் சொல்கிறார்கள். சந்திரபாபு நாயுடு பார்ப்பவர்கள் எல்லாம் ஏற்கனவே மோடிக்கு எதிரான கூட்டணியில் இருப்பவர்கள்தான். புதிதாக கூட்டணி ஏற்படுத்துவது போல் ஒரு மாய தோற்றத்தை ஏற் படுத்துகின்றனர்.

சந்திரபாபு நாயுடு-ஸ்டாலின் சந்திப்பு இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்லை. மோடியால் தமிழக மக்களுக்கு என்ன பயன் என்று கேட்ட சந்திரபாபு நாயுடு, மன்மோகன்சிங், சிதம்பரம் போன்றவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று ஸ்டாலினிடம் கேட்டு இருக்கலாமே?.

இது கார்பரேட் கம்பெனிகளுக்கான அரசு அல்ல. காமன் (பொது) மக்களுக்கான அரசு. இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். தமிழர்களின் பாதுகாப்பை வலியுறுத்துவோம். மோடியை விட ஸ்டாலின் பெரிய தலைவர் என்று சந்திரபாபு நாயுடு கூறுவதற்கு சிரிப்பதை தவிர ஒன்றும் சொல்வதற்கில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்