நெல் ஜெயராமன் உடலுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அஞ்சலி

சென்னை தேனாம்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள நெல் ஜெயராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின்.

Update: 2018-12-06 04:06 GMT
சென்னை,

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கடும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் ஜெயராமன். அவரது நிலையை உணர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், கார்த்தி, சிவ கார்த்திகேயன், சூரி உள்ளிட்ட திரைப்படக் கலைஞர்கள், நண்பர்கள், விவசாயிகள் மற்றும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் தமிழர்கள் எனப் பலரும் நேரில் சந்தித்தும், அவரது சிகிச்சைக்கு உதவினர்.

நடிகர் சிவகார்த்திகேயன் அவரை சென்னைக்கு அழைத்து வந்து அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நெல் ஜெயராமன் உடல் நிலை நேற்று மாலை மோசமடைந்தது. உடனடியாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டர். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5.30 மணியளவில் மரணமடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டுச்செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் செய்யப்பட உள்ளன.

நெல் ஜெயராமனின் பூத உடல், சென்னை தேனாம்பேட்டையில் வைக்கப்பட்டுள்ளது. நெல் ஜெயராமன் உடலுக்கு இன்று காலை 11 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள  நெல்ஜெயராமன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு.க ஸ்டாலின், ”நெல்ஜெயராமனின் மறைவு ஒட்டுமொத்த விவசாயிகளுக்கு பேரிழப்பாகும். நெல்ஜெயராமனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நெல் திருவிழா நடத்தி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்”என்று தெரிவித்தார். 

நெல் ஜெயராமன் உடலுக்கு  ஜி.கே.வாசன், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்