விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தம்: கைதான தொழில் அதிபர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்

பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தி இருந்த வழக்கில் கைதான தொழில் அதிபர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

Update: 2018-12-06 22:15 GMT
ஆலந்தூர்

சென்னை ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான தங்கும் விடுதியை நடத்தி வந்தவர், சம்பத்ராஜ் என்ற சஞ்சீவி (வயது 48). குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த இவர், விடுதியிலேயே தனது கட்டுமான நிறுவன அலுவலகத்தையும் நடத்தி வந்தார்.

இந்த விடுதியில் 6 பெண்கள் தங்கி இருந்தனர். சம்பத்ராஜ், கண்ணுக்கு தெரியாத வகையில் பெண்கள் தங்கி இருந்த படுக்கை அறை, குளியல் அறை, உடை மாற்றும் இடத்தில் உள்ள ஹேங்கரில் நவீன கேமராக்களை பொருத்தி, பெண்களை ஆபாசமாக படம் எடுக்க திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் அதற்குள் அங்கு தங்கி இருந்த பெண்கள், அதை கண்டுபிடித்து போலீசில் புகார் செய்தனர். இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து சம்பத்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். தனது கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்துவந்த பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததையும் வீடியோவாக பதிவு செய்து வைத்து இருப்பதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.

விரைவில் குற்றப்பத்திரிகை

என்ஜினீயரிங் பட்டதாரியான சம்பத்ராஜ், தனது கட்டுமான நிறுவனம் மூலம் வீடு கட்டித்தருவதாக பலரிடம் மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர் மீது மத்திய குற்றப்பிரிவில் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு உள்ளது.

தற்போது விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்திய வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டு உள்ளதால் மேற்கொண்டு அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கலாமா? அல்லது விரைவாக குற்றப்பத்திரிகையை தயாரித்து கோர்ட்டில் தாக்கல் செய்யலாமா? என்று சட்ட வல்லுனர்களுடன் போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் விரைவில் அவருக்கு தண்டனை பெற்றுத்தரும் வகையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்