சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 10 அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி உள்பட தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

Update: 2018-12-07 23:30 GMT
சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், பணிவிடை செய்வதற்கும் ஊழியர்கள், வார்டு ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் பணம் பெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல டாக்டர்கள் ஒப்புதல் சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள முக்கிய அரசு ஆஸ்பத்திரிகளிலும் இதேநிலை தான் காணப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளது. எனவே தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வியூகம் அமைத்தனர். அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கசாமி தலைமையில் 11 பேர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் முதலில் பார்வையாளர்கள் போல ஆஸ்பத்திரி வளாகத்தை நோட்டமிட்டனர். மருந்து-மாத்திரைகள் வழங்கும் இடம், ‘எக்ஸ்ரே’, ‘ஸ்கேன்’ எடுக்கும் இடம் போன்ற பகுதிகளை பார்வையிட்டனர்.

அப்போது நோயாளிகளிடம் மருத்துவ சேவை, பணிவிடை செய்வதற்கு யாரேனும் லஞ்சம் பெறுகிறார்களா? என்பதையும் ரகசியமாக கண்காணித்தனர். மருந்து-மாத்திரைகள், அறுவை சிகிச்சைக் கான மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக் கும் சென்று சோதனை செய்தனர். எவ்வளவு மருந்து- மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டது? தற்போது எவ்வளவு கையிருப்பு உள்ளது? போன்ற ஆவணங்களை போலீ சார் ஒப்பிட்டு பார்த்தனர்.

‘எக்ஸ்ரே’, ‘ஸ்கேன்’ மையங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் பெறப்படுகிறதா? அல்லது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பதையும் போலீசார் சரிபார்த்தனர். நோயாளிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நடந்தது. இ.சி.ஜி. பரிசோதனை அறையில் இருந்த கணக்கில் வராத பணத்தையும், சி.டி.ஸ்கேன் பரிசோதனை அறையில் பணிபுரியும் ஆதிலட்சுமி என்ற ஊழியரின் மணிபர்சையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்..

லஞ்ச ஒழிப்பு போலீசார் பிணவறையிலும் உள்ளே சென்று ஆய்வு செய்தனர். அங்கு பணிபுரியும் ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

கஸ்தூரிபா காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பிறக்கும் ஆண், பெண் குழந்தைகளுக்கு ஏற்ப செவிலியர்களும், ஊழியர்களும் லஞ்சம் கேட்பதாக வந்த புகாரின்பேரில் இந்த சோதனை நடந்தது. பிரசவ வார்டுகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினார்கள்.

கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, ஸ்டான்லி போன்ற அரசு ஆஸ்பத்திரிகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை அந்தந்த ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரிகள் மறுத்தனர்.

காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாதசேகரன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் கணேசன், தமிழரசி, நிவாஷ் ஆகியோர் கொண்ட போலீசார் நேற்று காலை சென்றனர். அங்குள்ள பிரசவ வார்டு, ஸ்கேன் சென்டர், எக்ஸ்ரே பிரிவு, விபத்து பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் பிரசவ வார்டு உள்பட பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் லஞ்ச பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நேற்று லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். துணை சூப்பிரண்டு சங்கர் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சங்கரசுப்பிரமணியம், ஜெயபாரதி, சசிகலா மற்றும் 10 பேர் கொண்ட குழுவினர் மருத்துவமனைக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் புறநோயாளிகள் பிரிவு, கண்காணிப்பாளர் அறை, மருந்து கிடங்கு, நவீன சமையல்கூடம், பிரசவ வார்டு, அறுவை சிகிச்சை அறை, ஸ்கேன் எடுக்கும் இடம், கண் சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை பிரிவு, பிணவறை என அனைத்து பிரிவுகளுக்கும் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மகப்பேறு வார்டில் இருந்து சில ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

கடலூர் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நடந்த சோதனையில் கணக் கில் வராத பணம் ரூ.6 ஆயிரம் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த சோதனையின்போது ஒரு டாக்டர் மீதும், ஒரு செவிலியர் மீதும் ஊழியர்கள் பல்வேறு முறைகேடு புகார்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தினர்.

தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரி, திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனாலும் இங்கு பணம் எதுவும் சிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதேபோல மதுரை அரசு பெரிய ஆஸ்பத்திரியிலும், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியிலும் சோதனை நடந்தது. மொத்தம் 10 அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த சோதனை நடந்தது.

மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினர் இணைந்து தமிழகத்தில் 10 அரசு ஆஸ்பத்திரிகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் மருத்துவ அலுவலர்கள் செய்யும் வருகை பதிவு முறைகேடு மற்றும் பலவேறு முறைகேடுகள் குறித்த விவரங்கள், ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை அலுவலர்களிடம் இருந்து கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

சோதனை நடந்த அரசு ஆஸ்பத்திரிகள்

1. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரி.

2. சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி ஆஸ்பத்திரி.

3. காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி.

4. திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி.

5. திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி.

6. தஞ்சை அரசு ஆஸ்பத்திரி.

7. மதுரை அரசு ஆஸ்பத்திரி.

8. கடலூர் அரசு ஆஸ்பத்திரி.

9. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அரசு ஆஸ்பத்திரி.

10. சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரி.

மேலும் செய்திகள்