இருதய ஆபரேஷனுக்காக சேமித்த பணத்தை கஜா புயல் நிவாரணத்துக்கு வழங்கிய சென்னை போலீஸ்காரர் மகள்

இருதய ஆபரேஷனுக்காக உண்டியலில் சேமித்த பணத்தை கஜா புயல் நிவாரணத்துக்கு சென்னை போலீஸ்காரர் மகள் வழங்கினார்.

Update: 2018-12-08 21:15 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் பாலு (வயது 38). இவர் சென்னையில் போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கவிதா (37). இவரும் சென்னையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர்கள் சென்னை ஆவடியில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். இவர்களுடைய மகள் இசனா பாலு (7).

கணவன், மனைவி 2 பேரும் சென்னையில் வசித்து வருவதால், இசனா பாலு சத்தியமங்கலத்தில் உள்ள தனது பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வருகிறாள். மேலும் அவள் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். இசனா பாலுவுக்கு 3 வயது இருக்கும்போது இருதய பாதிப்பு இருந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. மேலும் 10 வயது ஆகும்போது 2-வது தடவையாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

உண்டியல் பணம்

இந்த நிலையில் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வந்தனர். விழாவுக்கு தனது பாட்டி பூங்கோதையுடன் வந்த இசனா பாலு தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் வழங்கினார். அப்போது சிறுமியின் பாட்டி பூங்கோதை கூறுகையில், ‘இவள் (இசனா பாலு) எனது பேத்தி. இவளுக்கு ஏற்கனவே இருதய ஆபரேஷன் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இன்னொரு ஆபரேஷன் செய்யவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். தன்னுடைய இருதய ஆபரேஷன் செலவுகளுக்காக உண்டியலில் கடந்த 2 ஆண்டுகளாக பணம் சேர்த்து வந்தாள். தற்போது கஜா புயல் நிவாரணத்துக்காக பலரும் நிதி வழங்குவதை தெரிந்து கொண்டு அவள் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணம் முழுவதையும் அமைச்சரிடம் வழங்குகிறாள்,’ என்றார். உண்டியலில் ரூ.950 இருந்தது.

அந்த பணத்தை பெற்றுக்கொண்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறுகையில், ‘இந்த சிறுமியின் 2-வது இருதய ஆபரேஷனுக்கான மருத்துவ செலவை அரசு ஏற்கும்,’ என்றார்.

மேலும் செய்திகள்