ஆணவ படுகொலையில் கணவரை இழந்த கவுசல்யா மறுமணம் பறை இசை கலைஞரை மணந்தார்

ஆணவ படுகொலையில் கணவர் சங்கரை இழந்த கவுசல்யா நேற்று மறுமணம் செய்துகொண்டார். அவர் பறை இசை கலைஞரை மணந்தார்.

Update: 2018-12-09 20:45 GMT
கோவை, 

ஆணவ படுகொலையில் கணவர் சங்கரை இழந்த கவுசல்யா நேற்று மறுமணம் செய்துகொண்டார். அவர் பறை இசை கலைஞரை மணந்தார்.

ஆணவ படுகொலை

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குமரலிங்கத்தை சேர்ந்த வேலுசாமி என்பவரின் மகன் சங்கரும் (வயது 25), திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யாவும் (22) ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தபோது காதல் வசப்பட்டனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் கவுசல்யாவின் குடும்பத்தில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

2015-ம் ஆண்டு இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். இதனால் கோபம் அடைந்த கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படை மூலம் 2 பேரையும் கொல்ல திட்டமிட்டனர். 2016-ம் ஆண்டு உடுமலை பஸ் நிலையம் அருகில் பட்டப்பகலில் சங்கரையும், கவுசல்யாவையும் கூலிப்படையினர் வெட்டி சாய்த்தனர். இதில் சங்கர் உயிரிழந்தார். கவுசல்யா காயத்துடன் உயிர்தப்பினார். இந்த ஆணவ படுகொலை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

6 பேருக்கு தூக்கு

இதுதொடர்பாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலமேலு கடந்த ஆண்டு தீர்ப்பு கூறினார்.

இதில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, கூலிப்படையை சேர்ந்த 5 பேர் என 6 பேருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய் மாமா பாண்டித்துரை, கல்லூரி மாணவர் பிரசன்னா ஆகிய 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.

காதல் மலர்ந்தது

சங்கர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட பின்னர் கவுசல்யா சங்கரின் பெற்றோருடன் குமரலிங்கத்தில் வசித்து வந்தார். சங்கர் பெயரில் சமூகநீதி அறக்கட்டளை நடத்தி வந்தார். சாதி ஆணவ படுகொலைக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை எதிர்த்தும் அவர் போராடி வந்தார். மாணவர்களுக்கு பயிற்சி மையம் ஒன்றையும் நடத்திவந்தார்.

அங்கு மாணவர்களுக்கு பறை இசை பயிற்சி அளிக்க கோவையை சேர்ந்த பறை இசை கலைஞர் சக்தி (27) என்பவர் அடிக்கடி சென்றுவந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 6 மாதங்களாக காதலித்துவந்த அவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள்.

கோவையில் மறுமணம்

இதுகுறித்து சக்தி தனது பெற்றோரிடமும், கவுசல்யா, சங்கரின் பெற்றோரிடமும் தெரிவித்தனர். இரு வீட்டார் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் கோவையில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் திருமண உறுதிமொழி வாசிக்க அதை சக்தியும், கவுசல்யாவும் திரும்பக்கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

சங்கரின் தந்தை வேலுசாமி மாலை எடுத்து கொடுக்க பறை இசை முழங்க சுயமரியாதை முறைப்படி இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர். இதில் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழர் விடியல் கட்சி தலைவர் டைசன் மார்ட்டின் உள்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். திருமணம் முடிந்ததும் சக்தியும், கவுசல்யாவும் மாலையுடன் பறை அடித்து மகிழ்ந்தனர்.

போராடுவேன்

சக்தி விஷூவல் கம்யூனிகேசன் படித்து சில ஆண்டுகள் வெப் டிசைனர் ஆக பணிபுரிந்துள்ளார். பின்னர் பறை இசை பயிற்சி பள்ளியை கோவை, சென்னை, திருப்பூர், ஈரோடு ஆகிய நகரங்களில் நடத்திவருகிறார். கவுசல்யாவுக்கு நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் வேலை கிடைத்து அங்கு பணிபுரிந்து வருகிறார். மறுமணம் செய்துகொண்ட கவுசல்யா நிருபர்களிடம் கூறும்போது, “நானும், சக்தி யும் சாதி ஒழிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்போம். ஆணவ படுகொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்றார்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சாதி ஆணவத்தால் தனது காதல் இணையரை இழந்ததை தனது சொந்த சோகமாக மட்டும் சுருக்கிப் பார்க்காமல் சமூகக் கட்டமைப்பு தான் இதற்கு காரணம் என்று செயல்பட்டு வந்த சகோதரி கவுசல்யா - பறை இசைக் கலைஞர் சக்தியை வாழ்வு இணையராக தேர்ந்தெடுத்துக் கொண்டதை அறிந்து மகிழ்கிறேன். இந்நிகழ்வை உடுமலை சங்கரின் தந்தையும், தம்பியும், பாட்டியும் பங்கேற்றே நடத்தி வைத்திருப்பது கவுசல்யாவின் பொது நோக்கத்துக்கு கிடைத்த பாராட்டு. தமிழ் சமூக வார்ப்புகளான கவுசல்யா - சக்தி இருவரும் இல்வாழ்விலும், சமூக வாழ்விலும் சிறந்து விளங்க எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்