எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதாவின் பெயரை சூட்ட கோரிக்கை வைக்கப்படும்; அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதாவின் பெயரை சூட்ட கோரிக்கை வைக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

Update: 2018-12-20 09:52 GMT
சென்னை,

ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது கடந்த 2014-ம் ஆண்டு, தமிழகத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி (அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகம்) அமைக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

பின்னர் அதே ஆண்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோடு அருகே உள்ள பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கடந்த ஜூன் மாதம் மத்திய குழு கூடி எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்து ஒப்புதல் வழங்கியது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

இதன்பின் டெல்லியில் கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் இதற்காக ரூ.1,264 கோடி ஒதுக்கீடு செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதால் கூடுதலாக 100 எம்.பி.பி.எஸ். இடங்களும், மற்றும் 60 பி.எஸ்சி. (நர்சிங்) இடங்களும் கிடைக்கும். இந்த மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் இருக்கும்.

மேலும் இந்த மருத்துவமனை தினசரி 1,500 வெளிநோயாளிகளுக்கும், ஒரு மாதத்துக்கு 1,000 உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கக்கூடியதாக இருக்கும். இங்கு 15 முதல் 20 வரையிலான சிறப்பு துறைகள் இருக்கும். இந்த மருத்துவமனைக்கு ஒரு இயக்குனர் நியமிக்கப்படுவார்.  45 மாதங்களில் இந்த மருத்துவமனையை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை சூட்ட மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டியிருந்தால், ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்கலாம் என எனக்குள்ளே கேள்வி கேட்டுள்ளேன்.

கஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய குழு அறிக்கை தாக்கல் செய்த பின்னர், மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து தேவையான நிவாரண நிதி பெறப்படும் என்றும் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்