தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைத்த சீலை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைத்த சீலை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2018-12-21 09:57 GMT
சென்னை,

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் விஷால் தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.  அவருக்கு எதிராக அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த தயாரிப்பாளர்கள் சென்னை தியாகராயநகர் யோகாம்பாள் தெருவில் உள்ள சங்க அலுவலகத்தில் திரண்டு, விஷாலுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சங்க அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டி சாவியை எடுத்து சென்று விட்டனர். அண்ணாசாலையில் உள்ள சங்க அலுவலகத்தையும் பூட்டினார்கள்.

இதை அறிந்ததும் எதிர்கோஷ்டியினரும் அங்கு திரண்டு வந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் விஷாலும் அங்கு வந்தார்.  பின்னர் பூட்டை உடைத்து அலுவலகத்துக்குள் செல்ல முயன்றார். இதனால், கைது செய்யப்போவதாக அவரை போலீசார் எச்சரித்தனர்.

இதைத்தொடர்ந்து விஷாலே போலீஸ் வேனில் ஏறி அமர்ந்தார். அவருடன் துரைராஜ், கதிரேசன், அன்பு, சதீஷ்குமார், ராமநாதன், சங்கர், பிரவீன்காந்த் ஆகியோரும் வேனில் ஏறினார்கள். விஷால் உள்ளிட்ட 8 பேரையும் போலீசார் கைது செய்து தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்று தங்க வைத்தனர்.

பின்னர் இரவு 7½ மணி அளவில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, விஷாலின் எதிர் தரப்பினர் அளித்த புகார் தொடர்பாக, சங்கங்களின் பதிவுத்துறை அதிகாரிகள் இருவர் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்கு வந்து பூட்டை திறந்து உள்ளே சென்று அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். கிண்டி தாசில்தார் ராம்குமாரும் அங்கு வந்தார். பின்னர் அதிகாரிகள் சங்க அலுவலகத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனர். அலுவலக சாவி தாசில்தார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதனை அடுத்து சீலை நீக்க விஷால் தொடர்ந்த வழக்கின் மீது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இன்று விசாரணை மேற்கொண்டனர்.  இதில் அவர்கள், தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைத்த சீலை நீக்க வருவாய் கோட்டாட்சியர், பதிவாளருக்கு உத்தரவிட்டு உள்ளனர்.

தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தியது ஏன்?  அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது தவறு.

நிர்வாகிகளை கையாண்டவிதம் தவறு.  விஷால் முறைகேடு செய்துள்ளார் என்றால் புகார் கொடுக்காமல் பூட்டு போடுவீர்களா?  சங்கத்திற்கு பூட்டு போட்டது தவறு என அதிருப்தி தயாரிப்பாளர் தரப்புக்கும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்