மதுரை விறகு கடை அதிபர் வீட்டில் 500 பவுன் நகைகள் கொள்ளை

மதுரையில் விறகு கடை அதிபர் வீட்டில் 500 பவுன் நகைகள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2019-01-12 22:45 GMT
மதுரை,

மதுரை காமராஜர்புரம், குமரன் தெருவை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 72), மாட்டுத்தாவணியில் விறகுக்கடை வைத்துள்ளார். இவர் அ.ம.மு.க. பகுதி அவைத்தலைவராகவும், விறகு கடை சங்க துணைத்தலைவராகவும் உள்ளார். அவரது மனைவி ஆறுமுகத்தம்மாள். இவர்களுக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணம் முடிந்து அந்த பகுதியில் தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.

தங்கவேலு அதிகாலை 4 மணிக்கு விறகு கடைக்கு சென்று விடுவது வழக்கம். அவர் சென்ற பிறகு ஆறுமுகத்தம்மாள் வீட்டை பூட்டி விட்டு நடைபயிற்சி செல்வார். அதே போன்று நேற்று காலை கணவர் சென்ற பிறகு அவர் நடைபயிற்சி சென்றார். பின்பு அவர் 6 மணிக்கு வீட்டிற்கு வந்த போது உள்ளே பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பொருட்கள் எல்லாம் சிதறிக்கிடந்தன. உடனே அவர் இது குறித்து தங்கவேலுக்கு தகவல் கொடுத்தார். அவர் போலீசில் புகார் செய்தார்.

500 பவுன் நகைகள் கொள்ளை

கீரைத்துறை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசார் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின்கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து, அங்கிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து 500 பவுன் நகைகள், 8 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பி சென்றது தெரியவந்தது.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். கொள்ளை சம்பவம் குறித்து கீரைத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை சம்பவத்தில் 2 நபர்களின் கைரேகை கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்