தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை எதிர்த்து வழக்கு : சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி

சென்னை தியாகராயநகரில் புதிய பலமாடி கட்டிடம் கட்டுவதற்காக திட்ட அனுமதி கோரி கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதியன்று அரசிடம் தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் விண்ணப்பித்தது.

Update: 2019-01-14 22:56 GMT
புதுடெல்லி,

பலமாடிக் கட்டிட ஆய்வுக் குழுவின் ஆலோசனைப்படி அரசு ஒப்புதல் அளித்ததோடு, திட்ட அனுமதி வழங்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு (சி.எம்.டி.ஏ.) அறிவுரை வழங்கியது.

அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 21-ந் தேதியன்று சி.எம்.டி.ஏ.யின் திட்ட அனுமதியும், 29-ந் தேதியன்று சென்னை மாநகராட்சியின் கட்டிட உரிமையும் கிடைத்தன. அதன் பின்னர் தியாகராயநகரில் பழைய ஷோரூம் இருந்த இடத்தில் தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் புதிய பலமாடிக் கட்டிடத்தைக் கட்டத் தொடங்கியது.

இந்த நிலையில், திட்ட அனுமதிக்கும், நிலப் பயன்பாடு மாற்றத்துக்கும் எதிராக சென்னை ஐகோர்ட்டில் தியாகராயநகரைச் சேர்ந்த கண்ணன் பாலச்சந்திரன் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் கடந்த நவம்பர் 14-ந் தேதியன்று நீதிபதி கிருபாகரன் தீர்ப்பளித்தார். அதில், அனைத்து சட்ட விதிமுறைகளின்படி நிலப் பயன்பாடு செய்யப்பட்டுள்ளது. பலமாடிக் கட்டிட அனுமதியை அனைத்து விதிகளையும் பின்பற்றி சி.எம்.டி.ஏ. வழங்கியுள்ளது என்று நீதிபதி கூறியிருந்தார்.

இந்த உத்தரவை தடை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் கண்ணன் பாலச்சந்திரன் அப்பீல் தாக்கல் செய்தார். இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோரைக் கொண்ட அமர்வில் 11-ந் தேதியன்று விசாரணைக்கு வந்தது. ஐகோர்ட்டின் உத்தரவில் தலையிட அவசியம் இல்லை என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்