சாதாரண நிகழ்வாக கருதக்கூடாது: சம்பா நெல் சாகுபடி குறைந்தது அபாய எச்சரிக்கை மத்திய, மாநில அரசுகளுக்கு சுட்டிக்காட்டி டாக்டர் ராமதாஸ் அறிக்கை

சம்பா நெல் சாகுபடி குறைந்தது ஓரு அபாய எச்சரிக்கை என்றும், இதை சாதாரண நிகழ்வாக கருதக்கூடாது என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு சுட்டிக்காட்டி டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2019-01-28 20:28 GMT
சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சம்பா நெல் சாகுபடி குறித்து மத்திய வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் சம்பா நெல் சாகுபடி கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு 26.85 சதவீதம் குறைந்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. இதை சாதாரணமான புள்ளி விவரமாகக் கருதி கடந்து சென்றுவிட முடியாது என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.

2018-2019-ம் ஆண்டு சம்பா பருவத்தில் தமிழகத்தில் 8.61 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மட்டும் தான் நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. இது 2017-2018-ம் ஆண்டில் சம்பா நெல் பயிரிடப்பட்ட 11.77 லட்சம் ஹெக்டேருடன் ஒப்பிடும்போது 26.85 சதவீதம் குறைவு ஆகும். நடப்பாண்டில், மேட்டூர் அணையில் அதிக அளவு தண்ணீர் இருந்ததால் சம்பா சாகுபடிக்கு சாதகமான சூழல் நிலவியது. அதனால், மொத்தம் 12.78 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்ய அரசு சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதனுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் 4.17 லட்சம் ஹெக்டேர், அதாவது 32.62 சதவீதம் குறைவாகவே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சம்பா சாகுபடி பரப்பு குறைந்ததற்கு வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாதது தான் காரணம் என்று கூறப்படுகிறது. நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 24 சதவீதம் குறைவு தான் என்றாலும், சம்பா சாகுபடி குறைய இது மட்டுமே காரணமல்ல. மழையைத் தாண்டி ஏராளமான காரணிகள் உள்ளன. அவற்றில் நெல் கொள்முதல் விலை போதுமானதாக இல்லாததும், கொள்முதல் கட்டமைப்பில் குறைபாடுகள் இருப்பதும் தான் மிகவும் முக்கியமானவை ஆகும்.

எனவே, தமிழகத்தில் சம்பா சாகுபடி பரப்பு குறைந்ததை சாதாரணமான நிகழ்வாகக் கருதாமல், இதை ஓர் அபாய எச்சரிக்கையாக மத்திய, மாநில அரசுகள் கருத வேண்டும். வேளாண் தொழில் நலிவடையக் காரணங்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைத்துக் குறைகளையும் சரிசெய்து, வேளாண்மையைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்