போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக வழக்கு: நடிகர் தனுசுக்கு மதுரை கோர்ட்டு நோட்டீஸ்

போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாகவும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் நடிகர் தனுசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-01-29 23:00 GMT
மதுரை,

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் கதிரேசன். இவர், நடிகர் தனுசை தனது மகன் என்றும், வயது முதிர்வின் காரணமாக தனக்கும், தன்னுடைய மனைவி மீனாட்சிக்கும் மாதந்தோறும் ஜீவனாம்சத்தை நடிகர் தனுஷ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த ஐகோர்ட்டு, கதிரேசன் சார்பில் மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்தநிலையில் மேலூரை சேர்ந்த கதிரேசன், மதுரை மாவட்ட 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது:-

குற்றவியல் நடவடிக்கை

வாரிசு உரிமை தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டபோது, நடிகர் தனுஷ் தனது பிறப்பு மற்றும் கல்விச் சான்றிதழ்களை போலியாக தயாரித்து தாக்கல் செய்துள்ளார். எனவே அவர் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடமும், கோ.புதூர் போலீசாரிடமும் மனு அளித்தேன். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் நடிகர் தனுஷ் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நோட்டீஸ்

இந்த வழக்கு நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க நடிகர் தனுஷ் மற்றும் போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்