சின்னதம்பி யானை உணவின்றி சுற்றி திரிந்து மயங்கி விழுந்தது

திருப்பூரில் உணவின்றி சுற்றி திரிந்த சின்னதம்பி யானை மயங்கி விழுந்துள்ளது.

Update: 2019-02-02 11:17 GMT
திருப்பூர்,

கோவையை அடுத்த கணுவாய், தடாகம், பன்னிமடை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 2 யானைகள் அட்டகாசம் செய்து வந்தன. அந்த யானைகளுக்கு பொதுமக்கள் விநாயகன், சின்னதம்பி என்று பெயிரிட்டனர். இதில் கடந்த மாதம் 18ந்தேதி விநாயகன் யானையை பிடித்து முதுமலை வனப்பகுதியில் விட்டனர். அதை தொடர்ந்து கடந்த 25ந்தேதி சின்னதம்பி யானை பிடிக்கப்பட்டு, பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பை அடுத்த வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டது.

மேலும் அந்த யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க ரேடியோ காலர் பொருத்தப்பட்டு இருந்தது. அதில் உள்ள ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் வனத்துறையினர் சின்னதம்பி யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். வரகளியாறில் இருந்த ஓய்வு விடுதி கட்டிடத்தை சேதப்படுத்திய யானை, வரகளியாறு பகுதியை விட்டு வெளியே வந்தது. பின்னர் அந்த யானை, கூமாட்டி, பனப்பள்ளம் வழியாக நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கு ஆழியாறு அருகே பந்தகால் அம்மன்பதி பகுதிக்கு வந்தது.

அங்கு சிறிது நேரம் முகாமிட்ட யானை, பொங்காளியூருக்கு காலை 6 மணிக்கு வந்தது. இதை ரேடியோ காலர் மூலம் கண்காணித்த வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். இதற்கிடையில் யானை அங்கிருந்து கோட்டூர் ஊருக்குள் புகுந்தது.

வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்டினார்கள். இதை தொடர்ந்து காலை 9 மணிக்கு யானை கோபால்சாமி மலை பகுதிக்கு சென்றது. யானை மலை அடிவாரத்தில் நிற்பதால் எப்போது வேண்டுமானாலும் ஊருக்குள் புகுந்து விட வாய்ப்பு உள்ளதன் காரணமாக யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், அங்கிருந்து யானை திருப்பூரில் மடத்துக்குளம் அருகே குடியிருப்பு பகுதிகளில் இன்று சுற்றித்திரிந்தது.  இதனால் சின்னதம்பி யானையை பிடிக்க வனத்துறையினர் விரட்டிச்சென்றனர்.  இதில் 100 கிலோமீட்டருக்கு மேல் உணவின்றி சுற்றி திரிந்ததால் திண்டுக்கல்லை நோக்கி செல்லும் வழியில் மைவாடி ரெயில் நிலையம் அருகே யானை மயங்கி விழுந்துள்ளது.  இதுபற்றி கூறிய வனத்துறையினர் யானை ஆரோக்கியமுடன் உள்ளது என தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்