‘பா.ஜனதாவின் அழுத்தத்தால் தி.மு.க.வை ஊழல் கட்சி என்கிறார்’ கமல்ஹாசன் மீது தி.மு.க. நாளேடு பாய்ச்சல்

பா.ஜனதாவின் அழுத்தத்தால் நடிகர் கமல்ஹாசன் தி.மு.க.வை ஊழல் கட்சி என்கிறார் என்று தி.மு.க. நாளேடான முரசொலியில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Update: 2019-02-11 22:00 GMT
சென்னை, 

தி.மு.க. நாளிதழான முரசொலியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் குறித்த கட்டுரை ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

கலைஞானி கமல்ஹாசனின் தோல் உரியத்தொடங்கி உள்ளது. நரித்தனத்தில் பெயர் போன இரத்தவார்ப்பல்லவா அவர். காலம், நேரம் பார்த்து தன்சுயரூபத்தை வெளிக்கொணர்ந்துள்ளார். வண்ணங்களைக் கலந்து அழகு உருவங்களை வடிப்பார்கள் ஓவியர்கள். இவரோ வண்ணங்களைக் குழப்பி, புதிய ஓவியம் படைக்கப்போவதாக அறிவித்து, நம்பியோர் முகத்தில் கரியைப் பூசியுள்ளார். திரையில் பல்வேறு வேடங்களைக் காட்டினார். நடிப்பாற்றல் என்று மகிழ்ந்து அவரைப் பாராட்டினோம்.

இப்போது அரசியல் பிரவேசம் நடத்தி, அதேபோல வேடங்களை மாற்றி வித்தை காட்டத் தொடங்கி உள்ளார்.

ஊடக விவாதங்களிலும், சில அரசியல் மேடைகளிலும் பேசி வரும் தோழர் மதிமாறன், கமல் அரசியல் வேடம்கட்டிய நாளில் இருந்து, இவர்களெல்லாம் பா.ஜனதாவால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை சுட்டிக்காட்டி வருகிறார்.

நம்மில் சிலர் கூட நினைத்தோம்; ஏன் நாம் கூட எண்ணினோம். கமல்ஹாசனை தேவையின்றி ஏன் சீண்டவேண்டும்; திராவிட இயக்க உணர்வோடு ஒத்துப்போகும் அவரை நோக்கி, ஏன் இதுபோன்ற குண்டூசித் தாக்குதலை நடத்த வேண்டும் என்றெல்லாம் நம்மிடையே கருத்துக்கள் நிலவின. மதிமாறன் போன்றோர் கொண்ட கருத்து, எத்தனை தீர்க்கதரிசனமானது என்பதை நிரூபித்திடும் வகையில், கமல்ஹாசனின் பேச்சு துல்லியமாக அமைந்துள்ளது.

அரிதாரங்கள் மேல் உடலை மாற்றலாம்; ஆனால், உள்ளுணர்வை மாற்ற இயலாது என்பதற்கு சிறப்பான எடுத்துக்காட்டாகி விட்டார் கமல்ஹாசன். மூட்டைகளைச் சுமக்கும் பிராணிக்கு கனம் தெரியுமே தவிர, அதனுள் இருப்பது என்ன என்பதை உணர முடியாது. மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்பது தெரியாது. எஜமான் தூக்கி வைப்பதைச் சுமந்து செல்வதுதான் அதன் வழக்கம்.

சில பிராணிகள்கூட மோப்பத்தில் எஜமானை அறிந்து விசுவாசத்தில் வால்ஆட்டும். மூட்டை சுமக்கும் பிராணியோ, கோல் தூக்கியவனை எல்லாம் எஜமானாகக் கருதிச் செல்லும். கோல்தூக்கி மிரட்டிய எஜமானுக்குப் பயந்து கோலோச்சப் புறப்பட்ட கமல்ஹாசனுக்கு செக்குக்கும், சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாது போய்விட்டது.

பாவம்; அவரைச் சொல்லிக் குற்றமில்லை; கட்சி தொடங்கி பல மாதங்கள் கடந்த பின், இப்போதுதான் தி.மு.க. ஊழல் கட்சியாக காட்சி தருகிறது அவருக்கு. ‘பத்மஸ்ரீ’ பட்டம் பெற்றபோதும், பாராட்டுவிழாவுக்கு அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதியை அழைத்த போதும், தி.மு.க. ஊழல் கட்சியாக தோன்றவில்லை. ‘மருதநாயகம்’ படப்பிடிப்பைத் தொடங்க அன்றைய தி.மு.க. முதல்- அமைச்சரை அழைத்தபோது, ஊழல் தெரியவில்லை.

அவ்வை சண்முகியாக வேடம் கட்டி, தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றபோதும் ஊழல் தெரியவில்லை. ஆனால், இப்போது திடீரென தி.மு.க. ஊழல் கட்சியாக அவர் முன் உருவெடுத்திருக்கிறது என்றால், என்ன காரணம்? ஆட்சியில் இருந்தபோதெல்லாம் ஊழல் கட்சியாகத் தோன்றாத ஒன்று, ஆட்சி அதிகாரத்தை இழந்து 7 ஆண்டுகள் முடிந்தபின் திடீரென ஊழல் கட்சியாக கமலுக்கு காட்சி அளிக்கிறது என்றால், அது அவரது சொந்தக் கருத்தாக இருக்க முடியுமா?

சினிமா பாணியில் சொல்ல வேண்டும் எனில், நாம் பல படங்களில் பார்த்த காட்சி மூலமே இதனை விளக்கிட இயலும். நாயகனின் நண்பன் பாத்திரத்தில் தோன்றுபவன், திடீரென நாயகனுக்கு எதிராக பேசுவான். நாயகன் குற்றவாளி என்பான். படம் பார்ப்பவர்கள் திகைப்பார்கள். என்ன இப்படி நேரம் பார்த்து காலை வாரி விட்டுவிட்டானே எனப் படம் பார்ப்பவர்கள் எல்லாம் திகைத்திருக்க, அதுவரை இரு பாத்திரங்களை மட்டும் ‘குளோசப்’பில் காண்பித்த கேமரா பின்நோக்கிச் செல்லும். அப்போது 3-வது பாத்திரம் ஒன்று, நாயகனின் நண்பனுக்கு பின்னால், அவர் முதுகின் மீது கத்தியையோ அல்லது துப்பாக்கியையோ வைத்து அழுத்திக்கொண்டிருப்பது காண்பிக்கப்படும்.

அதே நிலைதான், பின்னால் பா.ஜனதாவின் துப்பாக்கி அழுத்தத்தின் காரணமாக தன்னிலை மறந்து பிதற்றத் தொடங்கி உள்ளார் கமல்ஹாசன். ஆனானப்பட்டதாக கருதப்பட்ட புரட்சி நடிகர்கள்கூட அமலாக்கத்துறை, வருமானத்துறை மிரட்டலுக்கு பயந்து, அவர்களை வளர்த்த கட்சியின் மார்பில் பாய்ந்த வரலாற்றை தெரிந்தவர்கள் நாம்! “வளர்த்த கடா மார்பில் பாய்ந்த தடா” எனத் தன்வெண்கலக் குரலால் மறைந்த நாகூர் ஹனீபா பாடிய பாடல் கேட்டிருப்போம். அதனையே, எதிர்கொண்டு போராடி இந்தப் பேரியக்கத்தைக் காப்பாற்றி வந்தவர்கள் நாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கட்டுரை முரசொலி நாளிதழில் வெளிவந்த போதும், சென்னையில் நடைபெற்ற பாலிமர் டி.வி. தலைவர் பி.வி.கல்யாணசுந்தரத்தின் மகன் மற்றும் திருவள்ளூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரனின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனும் அரசியல் நாகரிகத்துடன் ஒருவருக்கொருவர் சகஜமாக பேசிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்