பாலாறு பிரச்சினையில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி

பாலாறு பிரச்சினையில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் என்று சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Update: 2019-02-12 23:30 GMT
சென்னை, 

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், பிரின்ஸ் (காங்கிரஸ்), நந்தகுமார் (தி.மு.க.) ஆகியோர் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்ட இருப்பது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து பேசினர். இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

1892-ம் ஆண்டைய மதராஸ்-மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும். இந்த ஒப்பந்தத்தின்படி, மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன்அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரை தடுப்பதற்கோ, திருப்புவதற்கோ, தேக்குவதற்கோ உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது.

சித்தூர் மாவட்டத்தில் குப்பம் எனும் பகுதியில் பாலாற்றின் குறுக்கே ஒரு அணையினை ஆந்திரா அரசு கட்ட உள்ளதாக ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் செய்தி தாள்களில் 4.1.2006 அன்று தகவல்கள் வெளிவந்தபோது, 5.1.2006 அன்றே ஜெயலலிதா, 1892-ம் ஆண்டைய ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி, ஆந்திர அரசு அணைகட்டும் பணியினை மேற்கொள்ள கூடாது என கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசும் இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆந்திர அரசு மற்றும் மத்திய அரசிடமிருந்து சாதகமான பதில் வராத நிலையில், தமிழ்நாடு அரசு 10.2.2006 அன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தது. அதன் பேரில், அணைக்கட்டும் பணிகள் தடுக்கப்பட்டன. இந்த வழக்கில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர அரசு சாட்சியாளர்களின் குறுக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து, சுப்ரீம் கோர்ட்டால் இவ்வழக்கு ஜூலை மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

ஆந்திர அரசு பெரும்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள தடுப்பணையின் உயரத்தை தன்னிச்சையாக உயர்த்தியுள்ளதாக செய்தி வந்தவுடன், ஜெயலலிதா 1.7.2016 அன்று உடனடியாக ஆந்திர முதல்-மந்திரிக்கு அனுப்பிய கடிதத்தில், ஆந்திர அரசின் இத்தகைய செயல் ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் எனவும், உயர்த்தப்பட்ட தடுப்பணையின் உயரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரவும் மற்றும் இயற்கையாக தமிழ்நாட்டிற்குள் வரக்கூடிய நீரை உறுதிப்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து மத்திய அரசுக்கும் ஆந்திர அரசுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டன. ஆந்திர அரசு 1892-ம் ஆண்டைய ஒப்பந்தத்தை மீறும் வகையிலும், தமிழ்நாட்டின் முன்அனுமதி பெறாமலும் தன்னிச்சையாக பாலாறு மற்றும் அதன் கிளை நதிகளின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்தியும், புதியதாக தடுப்பணைகள் கட்டியதும் ஒப்பந்தத்திற்கு முரணானது எனவும், அவைகளை முன்பிருந்த நிலைக்கே கொண்டுவர வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று, தமிழ்நாடு அரசு 18.7.2016 அன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தது.

மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் 7.5.2018 அன்று பாலாறு பிரச்சினை குறித்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது. பாலாற்றின் குறுக்கே சம்மந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவு பெறாமல் புதிய தடுப்பணைகளை கட்டுவதற்கு முனையக்கூடாது எனவும், இவ்வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பிறப்பிக்கும் வரையில் ஆந்திர அரசு தடுப்பணைகளின் உயரத்தை மேலும் உயர்த்தக்கூடாது எனவும், மத்திய நீர்வள ஆதார துறை செயலாளர் இக்கூட்டத்தின் முடிவில் தெரிவித்தார். மேலும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும், எனவும் மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகளின் பழுதுபார்ப்பு மற்றும் மறுகட்டமைப்பிற்காக ரூ.41.75 கோடி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டதாக செய்தித் தாள்களில் தகவல்கள் வெளியானது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு 13.11.2018 அன்று ஆந்திர அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், தடுப்பணைகளுக்கான விவரங்களை தமிழ்நாட்டின் பரிசீலனைக்காக அளிக்கும்படியும் மற்றும் தமிழ்நாடு அரசு அதன் கருத்துகளை அளிக்கும் வரையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதை நிறுத்திவைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், மத்திய அரசையும் இதுகுறித்து ஆந்திர அரசுக்கு உரிய அறிவுரைகள் வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆந்திர அரசிடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ பதில் ஏதும் வரப்பெறாத நிலையில், பாலாற்றின் குறுக்கேயுள்ள 21 தடுப்பணைகளின் பழுதுபார்ப்பு மற்றும் மறுகட்டமைப்பு பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் மனு ஒன்றை 19.11.2018 அன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது.

ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே மேலும் 30 புதிய தடுப்பணைகளை கட்ட உத்தேசித்திருப்பதாக 5.2.2019 அன்று செய்தி வந்ததையடுத்து, இத்தடுப்பணைகள் கட்டுவதற்கான அனுமதியை வழங்கக்கூடாது எனவும், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும்வரையில் தடுப்பணைகள் கட்டப்படக்கூடாது எனவும், அவ்வரசின் நீர்வள ஆதாரத் துறைக்கு அறிவுரை வழங்குமாறு 6.2.2019 அன்று ஆந்திர அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பாலாறு நதிநீர் பிரச்சினையில், ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசு மிக உன்னிப்புடனும், கவனத்துடனும், சட்டரீதியாகவும், பிரச்சினையை தொடர்ந்து அணுகிவருகிறது என்றும், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதற்கு இந்த அரசு அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்