பொங்கல் பரிசு கணக்கில் தவறு : சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

பொங்கல் பரிசு வழங்கியது தொடர்பாக துணை முதல்வர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால், திமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Update: 2019-02-14 10:39 GMT
சென்னை,

சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது, பொங்கல் பரிசுக்கான நிதி தொடர்பாக அவர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த பின்னர், திமுக எம்எல்ஏக்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பொன்முடி எம்எல்ஏ கூறியதாவது:-

ரேசன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு 1,000 ரூபாய் வழங்கியது தொடர்பான நிதி கணக்கில் தவறு உள்ளது. மொத்தம் உள்ள 2.01 கோடி ரேசன் கார்டுகளுக்கும் தலா 1,000 ரூபாய் வழங்கினால்கூட, 2010 கோடி ரூபாய் தான் ஆகும்.

இதற்காக பட்ஜெட்டில் ரூ.1,985 கோடி ஒதுக்கி உள்ளதாக கூறப்பட்டு உள்ள  நிலையில், துணை பட்ஜெட்டில் பொங்கல் பரிசுக்காக ரூ.2019.11 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முரண்பாடு குறித்து கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை. எனவே, வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத் தொடரில் திமுக எம்எல்ஏக்கள் முதல் முறையாக வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்