பொள்ளாச்சி சம்பவம்: திருநாவுக்கரசை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது.

Update: 2019-03-15 22:45 GMT
கோவை, 

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. கோர்ட்டில் வக்கீல்கள் திரண்டதால் காணொலி காட்சி மூலம் திருநாவுக்கரசு ஆஜர் படுத்தப்பட்டார்.

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு மற்றும் அவருடைய நண்பர்கள் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரை பொள்ளாச்சி போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையிலான போலீசார் பொள்ளாச்சியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே, இந்த வழக்கு சி.பி.ஐ. க்கு மாற்றப்பட்டது. ஆனாலும் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் இந்த வழக்கு இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்தனர். எனவே திருநாவுக்கரசை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோவையில் உள்ள தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நேற்று காலையில் விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே போலீசார் அவரை கோவை கோர்ட்டுக்கு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். திருநாவுக்கரசு கோவை கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுகிறார் என்ற தகவல் கோர்ட்டு முழுவதும் பரவியது. இதனால் நேற்று காலை 10 மணியில் இருந்து கோர்ட்டு வளாகத்தில் ஏராளமான வக்கீல்கள் திரண்டனர்.

இந்த சூழ்நிலையில், அவரை கோர்ட்டுக்கு அழைத்து சென்றால் போதிய பாதுகாப்பு இருக்க வாய்ப்பு இல்லை என்று போலீசார் கருதினர். எனவே போலீசார் அவரை கோர்ட்டுக்கு அழைத்து செல்லவில்லை. அத்துடன் திருநாவுக்கரசை கோர்ட்டுக்கு அழைத்து வந்தால் பாதுகாப்பு இருக்காது என தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி நாகராஜனுக்கு எடுத்து கூறப்பட்டது.

மேலும் அவரை காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்த போலீசார் அனுமதி கேட்டனர். அதற்கு நீதிபதி அனுமதி அளித்தார். இதையடுத்து நேற்று மாலை 4 மணியளவில் கோவை மத்திய சிறையில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் திருநாவுக்கரசு ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது போலீசார் இந்த வழக்கில் திருநாவுக்கரசு முக்கிய குற்றவாளி என்பதால் அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். அதற்கு திருநாவுக்கரசை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருநாவுக்கரசை கோவை மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ரகசிய இடத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து வக்கீல் எலிசபெத்ராணி கூறியதாவது:-

இந்த வழக்கில் குற்றவாளியை கொண்டு வரும்போது தகுந்த பாதுகாப்பு இல்லை. அத்துடன் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்று போலீசார் நீதிபதியை சந்தித்து முறையிட்டதுடன், சில ஆதாரங்களை அவரிடம் காண்பித்தனர். எனவே காணொலி காட்சி மூலம் திருநாவுக்கரசை கோர்ட்டில் ஆஜர்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது.

எல்லா வழக்குக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்களை இது போன்று காணொலி காட்சி மூலம் ஆஜர் படுத்துவது இல்லை. ஆனால் சமீபத்தில் ஒரு வழக்குக்கு உத்தரவு வந்தது என்று கூறி இருக்கிறார்கள். அந்த உத்தரவு மற்றும் நுண்ணறிவுப்பிரிவு போலீசாரின் அறிக்கை, பதற்றமான சூழ்நிலை ஆகியவை காரணமாக தான் கைதான திருநாவுக்கரசு கோர்ட்டில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட வில்லை. பதற்றமான சூழலை காரணம் காட்டி இந்த கோர்ட்டில் கைதான நபரை காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்துவது இதுவே முதல்முறை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்