துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-30 09:15 GMT
சென்னை,

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை எதிர்த்து, திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். காட்பாடி காந்திநகரில் துரைமுருகனின் வீடு உள்ளது. இங்கு நேற்றிரவு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

இந்த நிலையில், துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுக கூட்டணி படுதோல்வியடையும் என்ற சர்வே முடிவுகளால் மோடிக்கு எரிச்சல், ஏமாற்றம்  ஏற்பட்டுள்ளது. 

பிரதமர் மோடியே வருமானவரித்துறை ரெய்டுக்கு உத்தரவிட்டுள்ளார் . பாசிஸ்ட் பாய்ச்சல், சேடிஸ்ட் சேட்டையை பார்த்து திமுக ஒருக்காலும் ஓய்ந்துவிடாது. பணவிநியோகத்தை தடுக்க நினைத்தால் பிரதமரின் தலைமையில் சுதந்திர அமைப்புகள் இயங்க கூடாது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் நேரடிப் பார்வையில் சுதந்திரமான அமைப்புகள் செயல்பட வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்