எங்களை வெற்றி பெறச்செய்தால் 12ம் வகுப்பு வரை தரமான கல்வியை வழங்க முடியும் - கமல்ஹாசன் பேச்சு

எங்களை வெற்றிபெறச்செய்தால் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க முடியும் என ஆரணியில் நடந்த பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசினார்.

Update: 2019-04-10 17:36 GMT
ஆரணி, 

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வி.ஷாஜி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஆரணியை அடுத்த இரும்பேடு இந்திராகாந்தி சிலை அருகே கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

நான், இந்த தேர்தல் நமக்கு இல்லை என முடிவு செய்தேன். ஆனால் இந்த தேர்தலில் கண்டிப்பாக தமிழக மக்களின் நலனில் அக்கறையை கருத்தில் கொண்டு களத்தில் இறங்கி உள்ளோம். இந்த ஊருக்கு பட்டு ஜவுளி பூங்கா அமைத்து தருவதாக உறுதி அளித்தார்கள், செய்தார்களா? திண்டிவனத்தில் இருந்து ஆரணி வழியாக ஆந்திர மாநிலம் நகரிக்கு செல்லும் ரெயில் பாதை திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர். இதுவரை அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார்களா? இங்கு அரசு கலைக்கல்லூரி இல்லை. ஆனால் தனியாருக்கு கல்வியை தாரை வார்த்ததால் மூட்டை மூட்டையாக பணம் கொண்டு சென்றார்கள். பார்த்தீர்களா?

சாராயத்தை கொண்டே ஆட்சியை நடத்துகிறார்கள். அந்த துறையையும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும் கண்காணிக்கிறார். ஒரு நாட்டிற்கு முக்கியமானவை கல்வி, மருத்துவம், சுகாதாரம். ஆனால் இவற்றை தனியாருக்கு கொடுத்துவிட்டனர்.

கல்வியை உலகத்தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். 12–ம் வகுப்பு வரை அனைவருக்கும் தரமான இலவச கல்வியை கொடுக்க முடியும். இடம் கொடுத்தால் நாங்கள் செய்து காட்டுவோம்.

நான் இந்த அமைப்பை ஆரம்பிப்பதற்கு, 37 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டும் ஆனால் 37 ஆண்டுகளாக நற்பணி மன்றங்கள் அமைத்து உதவிகள் செய்து வந்தோம். இங்கு போட்டியிடும் வேட்பாளர் ஷாஜி கூட நற்பணி மன்றம் முலம் உதவிகள் செய்து வந்தவர்தான்.

இல்லாமையை இல்லாது செய்ய வேண்டும். அதுதான் அரசின் கடமை ஆகும். நமது வேட்பாளர் ஷாஜிக்கு ‘டார்ச் லைட்’ சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள், மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது, முடிவு உங்களிடம் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து ஆரணி நகருக்குள் காந்தி ரோடு, மார்கெட் ரோடு, கார்த்திகேயன் ரோடு வழியாக திறந்த ஜீப்பில் நின்றவாறே கைகூப்பி ‘டார்ச் லைட்’ காட்டியும் வாக்கு சேகரித்து சென்றார். அவருக்கு பல்வேறு இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்