சபரிமலை குறித்து பேசிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சபரிமலை குறித்து பேசிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

Update: 2019-04-16 13:07 GMT
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் சபரிமலை மற்றும் அய்யப்பன் விவகாரத்தை அரசியலுக்கு பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டது. 

பிரதமர் மோடி தேனியில் பிரசாரம் மேற்கொண்டபோது சபரிமலை விவகாரம் தொடர்பாக பேசினார். இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக், சபரிமலை விவகாரத்தில் மிகவும் மோசமான விளையாட்டை விளையாடுகிறது என்றார். சபரிமலை அய்யப்பன் பெயரை கூறினாலே கேரள அரசு பக்தர்களை கைது செய்கிறது எனவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். 

தேர்தல் ஆணையம் தடை விதித்தும், பிரதமர் மோடி சபரிமலை விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய அவர் மீது நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம் எழுதியுள்ளது. 

பினராயி விஜயன் பதில்

சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மோடி பச்சை பொய்யை பேசுகிறார் என பினராயி விஜயன் பதிலளித்து இருந்தார். கொல்லத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பினராயி விஜயன், பிரதமர் மோடி பேசுவது மிகவும் பச்சையான ஒரு பொய்யாகும். இதுபோன்ற ஒரு தவறான கருத்தை பிரதமரால் எப்படி கூறமுடிகிறது?.

“யாராவது ஒருவர் கைது செய்யப்பட்டால் அவர் சட்டத்திற்கு எதிரான செயலை செய்து இருப்பார். பிற மாநிலங்களில் பிரதமர் மோடியை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக சங்பரிவார் அமைப்பினர் சிறைக்கு செல்லாமல் இருக்கலாம். ஆனால் அது கேரளாவில் நடக்காது. சபரிமலை விவகாரத்தில் மோடி அரசு இரட்டை வேடம் போடுகிறது. அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் போராட்டம் நடத்தப்பட்டது. 

அப்போது மத்திய அரசு தான் 144 தடை உத்தரவை பிறப்பிக்க மாநில அரசிடம் கேட்டுக்கொண்டது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய படைகளையும் அனுப்ப தயாராக உள்ளோம் என்றும் கூறியது,” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்