உதவி வன காப்பாளர் தேர்வில் 14 பேர் தேர்வு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 7 பேர் வெற்றி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய உதவி வன காப்பாளர் பதவிக்கான தேர்வில் 14 பேர் தேர்வு பெற்றனர்.

Update: 2019-05-14 22:15 GMT
சென்னை, 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய உதவி வன காப்பாளர் பதவிக்கான தேர்வில் 14 பேர் தேர்வு பெற்றனர். இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 7 பேர் அடங்குவர்.

மனிதநேய மையம்

முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையிலான மனிதநேய மையம் சார்பில் சிவில் சர்வீசஸ் உள்பட பல்வேறு வகையான மத்திய, மாநில அரசு பணிகளுக்கான தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 3,360 இளைஞர்கள், பெண்கள் இந்த பயிற்சியை பெற்று மத்திய, மாநில அரசு பணிகளில் உள்ளனர்.

தமிழ்நாடு வனத்துறை பணியில் காலியாக இருந்த 14 உதவி வனக்காப்பாளர் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந் தேதி வெளியிட்டது.

முதல்நிலை தேர்வு அந்த ஆண்டு டிசம்பர் 17-ந் தேதியும், முதன்மை தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 28-ந் தேதியும் நடைபெற்றது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த 9-ந் தேதி நேர்முக தேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 41 பேர் கலந்துகொண்டனர்.

மாநிலத்தில் முதல் இடம்

நேர்முக தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் சிறந்த கல்வியாளர்களை கொண்டு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேர்முக தேர்வு முடிவு நேற்று வெளியானது. மனிதநேய மையத்தின் மூலம் நேர்முக தேர்வில் பங்கேற்ற 3 மாணவிகள் உள்பட 7 பேர் வெற்றி பெற்றனர். இதில், கே.வேல்மணி நிர்மலா, எஸ்.சாந்தவர்மன் ஆகியோர் தலா 666 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் இடம் பெற்று சாதனை புரிந்தனர். பி.மணிகண்டபிரபு 632.5 மதிப்பெண் பெற்று 2-வது இடமும், யு.சீனிவாசன் 629.5 மதிப்பெண் பெற்று 3-வது இடமும் பிடித்தனர்.

மேற்கண்ட தகவலை மனிதநேய மையத்தின் தலைவர் சைதை துரைசாமி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்