கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் மெத்தனமாக இருந்ததே தண்ணீர் பிரச்சினைக்கு காரணம் - கே.எஸ். அழகிரி பேட்டி

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் மெத்தனமாக இருந்ததே தண்ணீர் பிரச்சினைக்கு காரணம் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

Update: 2019-06-10 23:09 GMT
ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டு உள்ளது. குடிநீர் பஞ்சமாக உள்ளது. மக்களுக்கு குடிநீர் வழங்குவது அரசின் கடமை. ஆனால் முதல்- அமைச்சர் மழை பொய்த்து விட்டதாக கூறுகிறார். பருவமழை பொய்க்கும் என்பது மாநில அரசுக்கு முன்கூட்டியே தெரியும்.

எல்லாவற்றையும் முன்ஏற்பாட்டுடன் செய்வது தான் அரசாங்கம். குடிநீர் பிரச்சினையில் முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருந்ததே தண்ணீர் பிரச்சினைக்கு காரணம்.

நீட் தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று உள்ளனர். இது எப்படி சமூகநீதி ஆகும். நீட் தேர்வு தொடருமானால் தமிழக மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காது. இந்தியா முழுவதும் பாடத்திட்டம் ஒரே மாதிரியாக இல்லை. ஆனால் தேர்வு ஒரே மாதிரியாக உள்ளது.

தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்று மத்திய அரசிடம் தமிழக அரசு சொல்ல வேண்டும். பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் இடம் வழங்கலாம்.

அ.தி.மு.க.வில் நடப்பது உட்கட்சி பிரச்சினை. அந்த கட்சியில் இரட்டை தலைமை அல்ல, 200 தலைமை வந்தாலும் அல்லது ஒரே தலைமையாக வந்தாலும் மக்களின் ஆதரவை பெற முடியாது. பா.ஜ.க.வின் ‘பி-டீம்’மாக அ.தி.மு.க. செயல்படுவதை மக்கள் விரும்பவில்லை. பா.ஜ.க. எதை சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வதே அக்கட்சியின் தோல்விக்கு காரணமாக உள்ளது.

தமிழக சட்டமன்றத்தை கூட்டினால் தான் குடிநீர், நீட், மும்மொழி போன்ற மக்கள் பிரச்சினை குறித்து விவாதிக்க முடியும்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

மேலும் செய்திகள்