கோவையில் 7 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை : 6 பேரை பிடித்துச்சென்று விசாரணை

இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியுடன் தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகத்தில் கோவையில் 6 பேரின் வீடுகள் உள்ளிட்ட 7 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். இதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கின. இது தொடர்பாக 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-06-13 00:20 GMT
கோவை, 

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது.  ஏப்ரல் மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று கொழும்பு நகரில் தேவாலயம், நட்சத்திர ஓட்டல்களில் சக்திவாய்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் இலங்கையை உலுக்கியது.

இந்த தாக்குதல் குறித்து இந்தியா முன்கூட்டியே இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இலங்கை எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் அந்த சம்பவம் குறித்து இலங்கை உளவு பிரிவு விசாரணை நடத்தியதில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்தது. மேலும் இலங்கை குண்டுவெடிப்புக்கு காரணமான கும்பலுடன் சமூக வலைத்தளங்களில் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையைச் சேர்ந்த அவர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து துணை சூப்பிரண்டு விக்ரம் தலைமையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் கோவைக்கு காரில் வந்தனர்.

அவர்கள் கோவை மாநகர போலீசாரின் உதவியுடன் 7 குழுக்களாக பிரிந்து சென்று நேற்று காலை 5.30 மணி முதல் மாலை 5 மணி வரை கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள்.

கோவை உக்கடம் அன்பு நகரைச் சேர்ந்த முகமது அசாருதீன் (வயது 32), போத்தனூர் சாலை திருமால் நகரை சேர்ந்த அக்ரம் ஜிந்தா (26), தெற்கு உக்கடம் ஷேக் இதயத்துல்லா (38), குனியமுத்தூரைச் சேர்ந்த அபுபக்கர் (29), போத்தனூர் மெயின் ரோடு உம்மர் நகரைச் சேர்ந்த சதாம் உசேன் (26), தெற்கு உக்கடத்தை சேர்ந்த இப்ராகிம் என்கிற ஜாகின் ஷா (28) ஆகிய 6 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

மேலும் முகமது அசாருதீனை கரும்புக்கடை பகுதியில் அவர் நடத்தி வரும் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு அழைத்துச் சென்றும் அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.

அவரது அலுவலகத்தில் இருந்து மடிக்கணினி, டைரி, பென்டிரைவ் உள்பட சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இந்த சோதனையின்போது ஏர்கன்னில் பயன்படுத்தப்படும் 300 தோட்டாக்கள், 14 செல்போன்கள், 29 சிம் கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 6 மெமரி கார்டுகள், 4 ஹார்டு டிஸ்குகள், ஒரு இன்டெர்நெட் உபகரணம், 13 சி.டி.க்கள், டி.வி.டி.க்கள் மற்றும் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் நோட்டீசுகள், கையேடுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்களில் அபுபக்கர் போத்தனூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பணியாற்றி வருகிறார். இதயத்துல்லா தேன் விற்பனை செய்து வருகிறார். சதாம் உசேன், அக்ரம் ஜிந்தா ஆகியோர் கோவையில் உள்ள ஒரு நகைக்கடையில் பங்குதாரராகவும், இப்ராகிம் வாசனை திரவியங்கள் விற்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த சோதனையின் முடிவில், 6 பேரையும் கோவை ரேஸ்கோர்சில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

இது குறித்து என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இலங்கை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஜஹரான் ஹசிமினுடன், முகமது அசாருதீன் முகநூல் மூலம் தொடர்பில் இருந்து உள்ளார். இவர்கள் 6 பேரும் தடை செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பரப்பி வந்துள்ளனர். இதன்மூலம் இவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிற்கு வாலிபர்களை சேர்க்கும் நோக்கத்தில் செயல்பட்டுள்ளது தெரியவந்து இருக்கிறது. அவ்வாறு புதிய வாலிபர்களை சேர்த்து தென் இந்தியாவில் குறிப்பாக கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இந்த கும்பலின் தலைவனாக முகமது அசாருதீன் செயல்பட்டு உள்ளார். மேலும் கேரள மாநிலத்தில் ஐ.எஸ். தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட காசர்கோட்டை சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் என்பவருடன் தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த இப்ராகிம் என்கிற ஜாகின் ஷா நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

6 பேரின் வீடுகள் மற்றும் முகமது அசாருதீன் அலுவலகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட எலெக்டிரானிக் உபகரணங்களை அடிப்படையாக கொண்டு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் 6 பேரும் கொச்சி என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்கப்படுவார்கள் அல்லது சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்