ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை: முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Update: 2019-06-21 08:25 GMT
சென்னை,

தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இது தொடர்பாக தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- “  பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நமக்கு கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நதி நீர் கிடைக்கவில்லை.

முடிந்த அளவுக்கு துரித நடவடிக்கை எடுத்து உரிய நீர் வழங்கப்படுகிறது. அதிகாரிகள் நியமனம் செய்து குடிநீர் பிரச்சினையை கண்காணிக்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டன. 

நீராதாரங்கள் வற்றிப்போன நிலையிலும், குடிநீர் வழங்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், நிலத்தடி நீர், குவாரிகளில் எடுக்கும் நீர் ஆகியவற்றை சேகரித்து தண்ணீர் வழங்கி வருகிறோம். ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரெயில்மூலம் தண்ணீர் கொண்டு வர ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  கேரளா கொடுப்பதாக சொல்லும் தண்ணீர் நமக்கு போதுமானதாக இருக்காது. தண்ணீர் கொடுக்க முன்வந்துள்ள கேரள அரசுக்கு  நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்