டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்: பேச்சுவார்த்தை நடத்த ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி நியமனம் - ஐகோர்ட்டு உத்தரவு

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் புதிய டெண்டர் நடைமுறையில் 700 சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்படவில்லை.

Update: 2019-07-01 22:44 GMT
சென்னை, 

700  லாரிகளுக்கு ஒப்பந்தம் வழங்கக்கோரி நேற்று முதல் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில், இந்துஸ்தான், பாரத், இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி பி.டி.ஆதிகேசவலு இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். அதில், ‘இருதரப்பு வக்கீல்களும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண்பது சரியாக இருக்கும். இந்த பேச்சுவார்த்தை முடியும் வரை, வேலைநிறுத்த போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபடமாட்டார்கள் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

எனவே, இருதரப்பினருக்கு இடையே சமரச பேச்சுவார்த்தையை நடத்த ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமாரை மத்தியஸ்தராக நியமிக்கிறேன். இவர் தலைமையில் நாளை (புதன்கிழமை) முதல் பேச்சுவார்த்தை தொடங்கவேண்டும். லாரி உரிமையாளர்கள் சங்கம் உத்தரவாதத்தை மீறி செயல்பட்டால், அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைக்கிறேன்’ என உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்