புதிய கல்வி கொள்கை பற்றிய “நடிகர் சூர்யா கருத்தை ஆதரிக்கிறேன்” ரஜினிகாந்த் பேச்சு

‘புதிய கல்வி கொள்கை பற்றி நடிகர் சூர்யா பேசிய கருத்தை ஆதரிக்கிறேன்’ என்று ரஜினிகாந்த் கூறினார்.

Update: 2019-07-21 21:30 GMT
சென்னை,

சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று இரவு நடந்தது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசியதாவது:-

கே.வி.ஆனந்த் திறமையான இயக்குனர். நான் நடித்த சிவாஜி உள்ளிட்ட பல படங்களுக்கு சிறப்பான ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவர் இயக்கத்தில் தயாராகி உள்ள இந்த ‘காப்பான்’ படம் நிச்சயம் வெற்றி பெறும். சூர்யா விடாமுயற்சியால் முன்னேறி இருக்கிறார். ‘நேருக்கு நேர்’ படத்தில் அவரது நடிப்பு பேசப்படும்படி இல்லை. அதன்பிறகு பாலாவின் ‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களில் சிறந்த நடிகனாக தன்னை செதுக்கி உயர்ந்த இடத்துக்கு வந்தார்.

‘காக்க காக்க’, ‘கஜினி’, ‘அயன்’ என்று பல படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார். சூர்யாவையும், கார்த்தியையும் ஒழுக்கமானவர்களாக சிவகுமார் வளர்த்து இருக்கிறார். இருவருமே நல்ல பிள்ளைகளாக உருவாகி இருக்கிறார்கள்.

சமீபத்தில் புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யா பேசிய கருத்து சர்ச்சை ஆனது. ‘ரஜினிகாந்த் இதே கருத்தை பேசியிருந்தால் மோடி கேட்டிருப்பார்’ என்று இங்கே கூறினார்கள். சூர்யா பேசினாலே மோடி கேட்பார். அவரது கருத்தை நான் ஆதரிக்கிறேன். மாணவர்களுக்கு அகரம் பவுண்டேஷன் மூலம் நிறைய உதவிகள் செய்து வருகிறார்.

எனவே மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்து அறிந்த அனுபவம் அவருக்கு இருக்கிறது. எனவே அவர் பேசும் கருத்துகள் வரவேற்கத்தகுந்தவை. எதிர்காலத்தில் மக்களுக்கு அவரது தொண்டு தேவையாக இருக்கும் என்பதை தெரிவித்துகொள்கிறேன். இந்த படத்தில் ஆர்யாவும் நடித்திருக்கிறார். ‘நான் கடவுள்’ படத்தில் அகோரியாக அவர் நடித்ததை பார்த்து வியந்திருக்கிறேன்.

நான் ஒருமுறை இமயமலைக்கு சென்றிருந்தபோது கங்கை ஆற்றில் குளித்தேன். அப்போது கழுத்தில் அணிந்திருந்த ருத்ராட்ச மாலை கழன்று விழுந்துவிட்டது. இதனால் கவலைப்பட்டேன். எதிரே வந்த அகோரி ஒருவர் என்னை பார்த்து, ‘ருத்ராட்ச மாலை உனக்கு வேண்டும் இல்லையா... அது கிடைக்கும்’, என்று கூறிவிட்டு சென்றார். அதுபோல ஒரு ஆசிரமத்துக்கு சென்றபோது ஒரு பெண், ‘உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு எனக்கு ருத்ராட்ச மாலையை கொடுத்தார். இதுதான் அகோரிகளின் மகத்துவம்.

கவிஞர் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூலை படித்தேன். சிறப்பாக இருந்தது. அனைவரும் அதனை படிக்கவேண்டும். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

விழாவில் நடிகர்கள் சிவ குமார், மோகன்லால், ஆர்யா, இயக்குனர்கள் ஷங்கர், தங்கர் பச்சான், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகை சாயிஷா, இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ் உள்பட கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்