35வது நாள்: வெந்தய நிற பட்டாடையில் நின்ற கோலத்தில் அத்திவரதர் காட்சி

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் திருவிழாவின் 35வது நாளான இன்று அத்திவரதர் வெந்தய நிற பட்டாடையில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

Update: 2019-08-04 02:58 GMT
காஞ்சீபுரம்,

புகழ்பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1ந்தேதி முதல் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கடந்த 31ந்தேதி வரை சயனகோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இந்த மாதம் 1ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து செல்கின்றனர். நேற்று பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர்.  மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் அத்திவரதரை தரிசிக்க வசதியாக தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்காக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காஞ்சீபுரத்திற்கு வருகின்றனர். இதனால் காஞ்சீபுரத்தில் உள்ள விடுதிகள் நிரம்பி காணப்படுகிறது. வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் பஸ்களில் இருந்து இறக்கி விடப்பட்டு சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்கின்றனர். ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

அத்திவரதரை நேற்று தமிழக அமைச்சர்கள் சி.வி. சண்முகம், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட பலர் தரிசித்தனர்.  காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் திருவிழாவின் 35வது நாளான இன்று அத்திவரதர் வெந்தய நிற பட்டாடையில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

மேலும் செய்திகள்