அறநிலையத்துறை அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ததை மறுஆய்வு செய்யவேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை தமிழக அரசு மறு ஆய்வு செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-08-08 21:45 GMT
சென்னை, 

காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 2 சாமி சிலைகள் செய்ததில் தங்கம் முறைகேடு செய்ததாக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், கவிதா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி வி.பார்த்திபன் விசாரித்தார். அப்போது, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலை, தாமாக முன்வந்து வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதி, மனுதாரர் கவிதா மீதான குற்றச்சாட்டு குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அவரும் அறிக்கையை தாக்கல் செய்தார்.

மறுஆய்வு

இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை நேற்று பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கும், சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுவுக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அது குறித்து இருதரப்பினரும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இதில் இந்த ஐகோர்ட்டு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த முடியாது.

மனுதாரர் கவிதா தன்னை பணியிடை நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும் என்று முறையிடுகிறார். ஆனால், அவரை பணியிடை நீக்கம் செய்தது சரியா?, தவறா? என்ற கேள்விக்குள் செல்ல விரும்பவில்லை. அதேநேரம், பணியிடை நீக்கம் செய்த உத்தரவை 4 வாரத்துக்குள் தமிழக அரசு மறுஆய்வு செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்