தஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி-5 பேர் படுகாயம்

தஞ்சை அருகே கோவில் விழாவில் பங்கேற்று திரும்பியபோது மரத்தில் கார் மோதியதில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-08-16 22:23 GMT
தஞ்சாவூர்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன். அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவருடைய மகன் கபிலன் (வயது 25).

இவர் தஞ்சை மாவட்டம் ஆர்சுத்திப்பட்டு கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த கிடாவெட்டு விழாவுக்கு தனது நண்பர்களுடன் ஒரு காரில் சென்றார். அந்த காரை மன்னார்குடி புதிய வீட்டுவசதி வாரியத்தை சேர்ந்த பிரகதீஸ்வரன் (26) என்பவர் ஓட்டினார்.

கோவில் விழாவை முடித்துவிட்டு நண்பர்கள் அனைவரும் மதியம் காரில் மன்னார்குடிக்கு திரும்பினர். சடையார்கோவில்-சாலியமங்கலம் சாலையில் சின்னபுளிக்குடிகாடு கிராமம் அருகே கார் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற பனை மரத்தில் மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.

இதனால் காருக்குள் இருந்த அனைவரும் இடிபாடுக்குள் சிக்கி, சத்தம் போட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அருகில் உள்ள கிராம மக்கள் திரண்டு வந்தனர். பின்னர் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் காரை சாலைக்கு கொண்டு வந்து, அதில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். அப்போது டிரைவர் பிரகதீஸ்வரன், கபிலன் மற்றும் மதுரையை சேர்ந்த மோகன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

பின்னர் காருக்குள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நண்பர்கள் 5 பேரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த விபத்து குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்