ரெயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றபோது மொபட் மீது ரெயில் மோதியது; தாய் - குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

கொருக்குப்பேட்டை ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற போது, ரெயில் விபத்தில் இருந்து தாய் மற்றும் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ரெயில் சக்கரத்தில் சிக்கிய மொபட் சின்னாபின்னமானது.

Update: 2019-08-20 22:24 GMT
பெரம்பூர்,

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் சுமதி (வயது 30). இவரது 2 பெண் குழந்தைகளையும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களை தாய் சுமதி தினமும் தனது மொபட்டில் பள்ளிக்கு அழைத்து சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து மொபட்டில் குழந்தைகளுடன் பள்ளிக்கு புறப்பட்டார். அதன்பின்னர், கொருக்குப்பேட்டை ரெயில்வே நிலையத்துக்கு அருகில் உள்ள மூடியிருந்த ரெயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது அங்கு நெல்லூரில் இருந்து சென்னை நோக்கி மின்சார விரைவு ரெயில் ஒன்று வேகமாக வந்தது. இவர்களது மொபட்டின் அருகே ரெயில் நெருங்கி வந்ததை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் பயத்தில் கூச்சல் போட்டுள்ளனர்.

இந்த கூச்சலை கேட்டு பிறகுதான் ரெயில் தனது அருகே வருவதை சுமதி தெரிந்து கொண்டார். உடனே, இதை சுதாரித்து கொண்ட சுமதி பதறியடித்து, மொபட்டை அங்கேயே விட்டுவிட்டு, தனது 2 குழந்தைகளை தூக்கி கொண்டு ஓடி வந்துள்ளார். இதனால் தாய் மற்றும் 2 குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்கள்.

இதற்கிடையே ரெயில் சக்கரத்தில் மொபட் சிக்கியது. பின்னர் மின்சார ரெயில் மொபட்டை சிறிது தூரம் இழுத்து சென்றது. உடனே மின்சார ரெயில் ஓட்டுனர் ரெயிலை நிறுத்தினார்.

இதைக்கண்ட ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்து சேதமடைந்த மொபட்டை வெளியே மீட்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் மின்சார ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இங்கு, ரெயில்வே கேட் மூடப்பட்ட பின்னரும், மோட்டார் சைக்கிளில் வரும் வாகன ஓட்டிகள் பொறுமை காக்காமல் தண்டவாளத்தை கடந்து செல்வது வழக்கமாக உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்