பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்: கோவையில் 2-வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை

பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கோவையில் 2-வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.

Update: 2019-08-24 11:32 GMT
கோவை,

தமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளும் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் அவர்கள் அங்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையடுத்து கோவையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை விமான நிலையம், ரெயில் நிலையத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உக்கடம், கோட்டைமேடு, குனியமுத்தூர், கரும்புகடை, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று இரவு 10 மணிக்கே கடைகளை அடைக்க சொல்லி போலீசார் உத்தரவிட்டனர். இதையடுத்து கடைகள் அடைக்கப்பட்டது. இரவு முழுவதும் கோவை நகரம் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சந்தேகத்துக்கிடமான பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாயுடன் சோதனை நடத்தி வருகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் உள்ள 14 சோதனை சாவடிகளிலும் இரவு முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தற்காலிகமாக மேலும் 10 சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

உளவுத்துறையின் எச்சரிக்கையைடுத்து கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி நேற்று இரவு கோவை வந்தார். அவர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரண், மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, டி.ஐ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கோவை மாநகரில் சுமார் 1000 விநாயகர் சிலைகளும், புறநகர் பகுதியில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2வது நாளாக கோவையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நகரின் முக்கிய இடங்களான வழிபாட்டு தலங்கள், ரெயில், பேருந்து நிலையங்கள், வணிகவளாகங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

வேளாங்கண்ணி தேவாலயம், ஊட்டி வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம், கோவை சூலூர் விமானப்படை தளம், சபரிமலை ஐயப்பன் கோவில் மற்றும் மத ரீதியான பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கும் இடங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் போடப்பட்டு அதன் வழியே அனைவரும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் 2 பேர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள், ஒருவர் கோவையை சேர்ந்தவர் ஆவார்.

மேலும் செய்திகள்