தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: விசாரணை ஆணையத்தின் நிலை என்ன? ஐகோர்ட்டு கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடைபெறும் விசாரணை ஆணையத்தின் விசாரணை நிலை என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-08-26 22:15 GMT
சென்னை,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் வக்கீல் பாலன் ஹரிதாஸ் ஆஜராகி வாதிட்டார். அவர் தன் வாதத்தில் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் அமைதி வழியில்தான் போராட்டம் நடத்தினர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் நிலை அங்கு இல்லை. போலீசார் போராடும் மக்களை அடக்கி ஒடுக்கத்தான் நினைத்தனர்.

அப்பாவிகள் பலி

இதன் தொடர்ச்சியாகத்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 13 அப்பாவிகள் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு பின்னர்தான் அரசின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு முன்பு வரை அரசும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும் கைகோர்த்துத்தான் மக்களுக்கு எதிராக செயல்பட்டனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் குழந்தைகளை ஈடு படச் செய்தனர் என்று பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த வழக்கின் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளனர். ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூடிவிடுவோம் என்று அரசு முதலிலேயே அறிவித்து இருந்தால், இந்த போராட்டமே நடந்திருக்காது. 13 பேரும் பலியாகி இருக்கமாட்டார்கள்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

நிலை என்ன?

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் தற்போதைய நிலை என்ன? இதே சம்பவத்துக்காக சி.பி.ஐ. விசாரணை நடத்துகிறது. அந்த விசாரணையின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்வதாக தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன் கூறினார். இதையடுத்து, இந்த வழக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரிப்பதாக தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்