சென்னை அண்ணாசாலையில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு - சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு

சென்னை அண்ணா சாலையில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-13 23:45 GMT
சென்னை,

புதுச்சேரியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் அங்கு டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் பெருமாள்சாமி (வயது 50) என்பவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். பெருமாள்சாமி புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் பயணிகளை ஏற்றி வந்தார்.

இந்த கார் நேற்று இரவு சென்னை அண்ணா சாலையில் அண்ணா மேம்பாலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஒயிட்ஸ் சாலை சந்திப்பு அருகே வந்தபோது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியது. சுதாரித்துக் கொண்ட டிரைவர் பெருமாள்சாமி உடனே காரை ஓரமாக நிறுத்தி பயணிகளை கீழே இறக்கினார்.

அவர்கள் இறங்கியதும் காரின் முன்பகுதியில் புகை வந்த இடத்தை பெருமாள்சாமி ஆராய்ந்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அவர் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. கார் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அந்த வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது. இதுகுறித்து அண்ணா சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்