அம்பத்தூரில் 8-வது மாடியில் இருந்து விழுந்த பெண் என்ஜினீயர் பலி வேலைக்கு சேர்ந்த முதல் நாளே பரிதாபம்

வேலைக்கு சேர்ந்த முதல் நாளே சாப்ட்வேர் நிறுவனத்தின் 8-வது மாடியில் இருந்து விழுந்த பெண் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-09-19 21:45 GMT
பூந்தமல்லி,

திருச்சியை சேர்ந்தவர் ஜூலியஸ். இவருடைய மகள் டேலிதா ஜூலியஸ்(வயது 24). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சென்னை அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் நேற்றுமுன்தினம் வேலைக்கு சேர்ந்தார்.

தியாகராயநகரில் தங்கி இருந்த அவர், முதல் நாளான நேற்று வேலைக்கு சென்றார். சாப்ட்வேர் நிறுவனத்தின் 3-வது மாடியில் வேலை செய்து வந்த டேலிதா ஜூலியஸ், இரவு திடீரென அந்த நிறுவனத்தின் 8-வது மாடியில் இருந்து தவறி விழுந்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

தற்கொலையா?

இது குறித்து தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் எஸ்டேட் போலீசார், பலியான டேலிதா ஜூலியஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.அதில், முதல் நாளான நேற்று வேலைக்கு வந்த டேலிதா ஜூலியசை, சக ஊழியர்கள் மதியம் சாப்பிட அழைத்தனர். ஆனால் அவர் வரவில்லை என தெரிகிறது. இரவு பணி முடியும் நேரத்துக்கு முன்பாக 3-வது மாடியில் இருந்து 8-வது மாடிக்கு சென்றவர் அங்கிருந்து விழுந்து இருப்பது தெரிந்தது.

எனவே அவர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்