நீட் ஆள்மாறாட்டம்: மேலும் 3 மாணவர்களை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை

நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக மேலும் 3 மாணவர்களை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-09-28 03:23 GMT
சென்னை,

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வரும் வெங்கடேசனின் மகன் உதித்சூர்யா (வயது 20). இவர் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தார். இந்த நிலையில் இவர், ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த விவரம் வெளியானது.

இந்த சம்பவம் குறித்து தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி வழக்குப்பதிவு செய்து உதித்சூர்யாவை நேற்று முன்தினம் கைது செய்தார். உதித்சூர்யா கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசனும் கைது செய்யப்பட்டார். 

போலீசாரிடம் வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தில் ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வதற்கு கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவரிடம் ரூ.20 லட்சம் கமிஷன் கொடுத்ததாக தெரிவித்து உள்ளார்.

கைதான உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மேலும் 5 பேர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. இதனால் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் கலந்தாய்வு முதல் மாணவர் சேர்க்கை வரை பல்வேறு கட்டங்களில் முறைகேடு நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி முறைகேடாக மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக சென்னையில் நேற்று ஒரு மாணவி உள்பட 3 பேர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கினார்கள்.

இந்நிலையில் தற்போது, உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விழுப்புரம், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 3 மாணவர்கள் நீட் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளன. சென்னையில் 3 மாணவர்களிடம் விசாரணை நடைபெறும் நிலையில், நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக இன்று மேலும் 3 மாணவர்கள் மற்றும் அவர்களின் தந்தையை சிபிசிஐடி போலீசார் கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் இடைத்தரகர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தொடர்ந்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருவதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்