‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான டாக்டர் வெங்கடேசன் உள்பட 2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி மாணவர் இர்பான் தேனி கோர்ட்டில் ஆஜர்

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர் வெங்கடேசன் உள்பட 2 பேரின் ஜாமீன் மனுக்கள் தேனி கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

Update: 2019-10-09 21:45 GMT
தேனி,

சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவருடைய மகன் உதித்சூர்யா (வயது 20). இவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தார்.

இதுகுறித்து தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகிய 2 பேரையும் கடந்த மாதம் 26-ந்தேதி கைது செய்தனர். பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களை தொடர்ந்து சென்னை மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ், வாணியம்பாடியை சேர்ந்த மாணவர் இர்பானின் தந்தை முகமது ஷபி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து இர்பானை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 1-ந்தேதி சேலம் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இர்பான் சரண் அடைந்தார். பின்னர் அவர் சேலம் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

தள்ளுபடி

கைதான டாக்டர் வெங்கடேசன், முகமது ஷபி ஆகியோர் ஜாமீன் கேட்டு தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த இரு மனுக்களும் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுக்களை மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் விசாரித்தார்.

ஐகோர்ட்டிலேயே இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு இன்னும் ஜாமீன் வழங்கப்படாத நிலையில், இந்த கோர்ட்டில் டாக்டர் வெங்கடேசன், முகமது ஷபி ஆகியோருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று அவர்களின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

கோர்ட்டில் இர்பான் ஆஜர்

இதற்கிடையே மாணவர் இர்பானை சேலம் சிறையில் இருந்து, தேனி மாவட்ட சிறைக்கு மாற்ற போலீசார் முடிவு செய்தனர். இதற்காக இர்பானை சேலம் போலீசார் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தினர்.

அவரை வருகிற 15-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். காவல் நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து இர்பானை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்