சென்னை உள்ளிட்ட நகரங்களில் சைக்கிளில் செல்ல தனிப்பாதை டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை உள்ளிட்ட நகரங்களில் சைக்கிளில் செல்ல தனிப்பாதையை ஏற்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-10-15 22:30 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகில் அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா தான் என்பது நமக்கு பெருமையளிக்கும் விஷயம் தான் என்றாலும், இன்றைய இளைஞர்களிடையே மாறிவரும் வாழ்க்கை முறையும், பயண முறையும் அவர்களின் உடல் நலனையும், பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கின்றன. இந்த ஆபத்தான போக்கு குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

பொதுவாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சைக்கிள் பயன்பாடு அதிக அளவில் இருக்கும். ஆனால், புதிய பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக வகை, வகையான இருசக்கர வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டதாலும், அவை எளிய தவணை முறையில் விற்பனை செய்யப்பட்டதாலும் இருசக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்றநிலை ஏற்பட்டது. இதனால் சைக்கிள் பழக்கம் படிப்படியாக குறையத்தொடங்கியது. இன்றைய நிலையில் இந்திய மக்களில் 9 சதவீதத்தினர் மட்டுமே சைக்கிள்களை பயன்படுத்துகின்றனர் என்பது மிகவும் வருத்தமளிக்கும் உண்மை ஆகும்.

உண்மையில் சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சி ஆகும். சைக்கிள் ஓட்டுவதை வழக்கமாக்கிகொள்வதன் மூலம் தொற்றாநோய்களின் தாக்கத்தில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி எரிபொருள் செலவை மிச்சப்படுத்துதல், சுற்றுச் சூழலை பாதுகாத்தல் உள்ளிட்ட ஏராளமான பயன்கள் கிடைக்கும். இந்திய அளவில் செய்யப்பட்டுள்ள ஆய்வுகளின்படி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவோரில் 50 சதவீதத்தினர் குறைந்ததூர பயணத்திற்கு சைக்கிள்களை பயன்படுத்தத் தொடங்கினால் ஆண்டுக்கு ரூ.2,700 கோடி எரிபொருள் செலவை மிச்சப்படுத்த முடியும்.

எனவே, தமிழகத்தில் சைக்கிள்கள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவதுடன், அனைவரும் சைக்கிளை பயன்படுத்துவதையும் உறுதிசெய்ய வேண்டும். அதேநேரத்தில் சென்னை போன்ற நகரங்களில் அனைத்துத் தரப்பினரும் மிகவும் பாதுகாப்பான முறையில் சைக்கிள் களை ஓட்ட வசதியாக சாலைகளில் தனிப்பாதையை ஏற்படுத்துதல், வாடகை சைக்கிள் திட்டத்தை மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்