குழந்தை சுஜித் நலமுடன் திரும்ப வேண்டும்; மு.க. ஸ்டாலின்

குழந்தை சுஜித் நலமுடன் திரும்ப வேண்டும் என்று அனைவரையும்போல நானும் எதிர்பார்க்கிறேன் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2019-10-28 15:11 GMT
சென்னை,

தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 ஆயிரம் அரசு டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள்.  பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மூத்த மருத்துவர்கள், உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்கள் என பல்வேறு அளவில் அரசு மருத்துவமனைகளிலும், மருத்துவ கல்லூரிகளிலும் பணியாற்றுகின்றனர்.

அரசு டாக்டர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் பணிக்கு செல்லாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களது போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்கிறது.

இதனிடையே, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களோடு தரையில் அமர்ந்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

மருத்துவர்கள் உடலை வருத்திக்கொண்டு போராட வேண்டாம், அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் என்று அவர்களிடம் ஸ்டாலின் கூறினார்.

இதன்பின்பு, திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து 100 அடி ஆழத்திற்கு சென்ற குழந்தை சுஜித் மீட்பு பணி பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், குழந்தையை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருவதை பார்க்கிறேன்.  குழந்தை சுஜித் நலமுடன் திரும்ப வேண்டும் என்று அனைவரையும்போல நானும் எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.

மேலும் செய்திகள்