அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 4-ந்தேதி உருவாகிறது மீனவர்களுக்கு எச்சரிக்கை

அந்தமான் கடல் பகுதியில் வருகிற 4-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Update: 2019-10-31 23:30 GMT
சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழையும், இதர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று(வெள்ளிக்கிழமை) மிதமான மழை பெய்யும் என்றும், வருகிற 4-ந்தேதி அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்திய வானிலைத்துறையின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

‘மஹா’ புயல்

அரபிக்கடலில் ‘மஹா’ புயல் இன்று (நேற்று) காலை 8.30 மணியளவில் லட்சத்தீவு பகுதிகளின் மீது நிலை கொண்டது. பின்னர் இது அமினி தீவுகளுக்கு வடகிழக்கில் சுமார் 40 கி.மீ. தொலைவில் நிலைகொண்டது. அதனைத்தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. இதையடுத்து இது மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொள்ளும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. 33 இடங்களில் கனமழையும், 4 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் 14 செ.மீ. மழையும், குன்னூரில் 13 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் 12 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

நெல்லை, கன்னியாகுமரி

அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் தமிழக பகுதிகளில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், வட தமிழகத்தில் ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மாலத்தீவுகள், லட்சத்தீவு மற்றும் கேரள கடற்கரை பகுதிகளுக்கு நாளை(இன்று) மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். வருகிற 4-ந்தேதி வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது வடமேற்கு திசையில் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும்.

எனவே மீனவர்கள் வடக்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் 4, 5-ந்தேதிகளில் மீனவர்கள் செல்லவேண்டாம். வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் அதாவது நேற்று (நேற்று முன்தினம்) வரையில் சென்னையில் 6 சதவீதமும், தமிழகத்தில் 14 சதவீதமும் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்